தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை வழங்கத் தயார்! சஜித் பகிரங்கம்
நான் ஜனாதிபதியாகத் தெரிவானால் இலங்கையின் இறையாண்மையைப் பாதிக்காத வகையில் தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை வழங்கத் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எனக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். சிங்கள மக்கள் மாத்திரமின்றி பெரும்பாலான தமிழ், முஸ்லிம் மக்களும் எனக்கான ஆணையை வழங்குவார்கள்.
புதிய அரசமைப்பு
நான் ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடன் தற்போதைய நாடாளுமன்றத்தைக் கலைத்து விடுவேன்.
தேர்தல் மூலம் புதிய நாடாளுமன்றம் அமையும். ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியே ஆட்சியமைக்கும்.
புதிய அரசமைப்பைக் கொண்டு வந்து இலங்கையின் இறையாண்மையைப் பாதிக்காத வகையில் தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை வழங்க நான் தயாராக இருக்கின்றேன்.
நாடாளுமன்றத்தின் ஆதரவு
இதற்குப் புதிய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஆளும் - எதிரணி உறுப்பினர்கள் ஆதரவு வழங்குவார்கள் என நம்புகின்றேன்.
எமது அரசில் இனவாதம், மதவாதம் என்ற ரீதியில் நாட்டில் மீண்டும் பிரச்சினைகள் ஏற்பட இடமளிக்கமாட்டேன்.
கடந்த காலங்களில் இனவாதத்தாலும் மதவாதத்தாலும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். அந்த நிலைமை இனியும் வேண்டாம். அனைவரும் ஒரே நாட்டு மக்கள்! ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |