இலங்கையின் அரசியல் வரலாறு மக்களால் முதன்முறையாக மாற்றி எழுதப்பட்டுள்ளது: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா
இலங்கையின் அரசியல் வரலாறு மக்களால் முதன்முறையாக மாற்றி எழுதப்படும் அளவுக்கான ஒரு புரட்சியை சுமந்துகொண்டிருக்கின்றது என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டதாவது,
“நமது நாடு, இவ்விடத்தில் அரசியல் ரீதியில் ஓர் ஆட்சி மாற்றம் நிகழ்வதில் நமக்கு ஆட்சேபனை கிடையாது.
மக்களின் இயல்பு வாழ்வை சாதாரணமான நிலையில் மீளவும் தூக்கி நிறுத்த அரசியல் மாற்றம்தான் அவசியம் என்ற நிலையில் மக்கள் போராட்டக்களமாக வீதிகளை மாற்றிக் கொண்டிருக்கும் நிலையில் இந்நாட்டில் அரசியல் ரீதியில் என்னமாதிரியான முடிவொன்றுக்குச் செல்வது என்ற நிலையில் அரசியல் கட்சிகள் தடுமாறிக் கொண்டிருப்பதையும், பதவிக் கதிரைக்கான போட்டியும் ஆசையும் தலைமைத்துவங்களுக்குள் அதிகரித்திருப்பதையும் நாம் தெளிவாகக் காணக் கூடியதாகவுள்ளது.
எந்தச் சிரத்தையுமின்றி எளிதாகக் கிடைக்கும் பொறுப்புமிக்க பதவிநிலையொன்றை யார்தான் விரும்பமாட்டார்கள் என்றே கருத்தாடல்களையும் பரபரப்பையும் பார்க்கும் போது எண்ணத் தோன்றுகின்றது.
தமிழர் தரப்பு தமது மக்களை மறந்து விட்டு நாட்டில் வீசுகின்ற புரட்சிநிலையொத்த அலைக்குள் தம்மை நிலைநிறுத்திக்கொள்ள அவசரப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது.
தமிழ் தேசியக் கட்சிகள் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டிய மிகவும் முக்கியமான தருணம் இது. காரணம் நிதானத்தை ஆசைகள் கவ்விட தமது மக்களின் உரிமைசார்ந்த எதிர்பார்ப்பையும் இருப்பையும் காவு கொடுத்துவிடக் கூடியளவுக்கு நமது அரசியல் பிரதிநிதிகள் சிலர் செயற்படுவது மிகவும் கவலையளிக்கின்றது.
போராட்டக்காரர்கள் இந்நாட்டின் பொருளாதார இறுக்க நிலையால் விளைந்த இயல்புவாழ்வின் நெருக்கடியில் இருந்தே அரசியல் மாற்றத்தைக் கோரி களத்துக்கு வந்தார்கள். மக்கள் வீதிகளில் வரிசையில் நின்று மாளாது கொட்டும் வெறுப்பின் உச்ச நிலையில் இருந்து இந்த மாற்றம் கோரிய போராட்டம் வடிவம் பெற்றது என்பதை மறந்துவிடக்கூடாது.

பசளையும், மண்ணெண்ணெய்யும், பெட்ரோலும் டீசலும் சமையல் வாயுவும் தடையில்லாமல் மக்களுக்குக் கிடைத்திருந்தால் இப்படியொரு மக்கள் போராட்டம் வெடித்திருக்க வாய்ப்புமில்லை. அரசியல் மாற்றம் கோரிய மக்கள் குரல் வீதிக்கு கோசமாக வந்துமிராது.
எனவேதான் ஆர்ப்பாட்டத்தின் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு தான் அரசியல் முடிவுகளை நோக்கி தமிழர் பிரதிநிகள் செயற்பட வேண்டும். நாளேயே ஒரு புதிய ஜனாதிபதியோ பிரதமரோ தெரிவு செய்யப்பட்டாலும் இந்நாட்டின் இனங்களுக்கிடையிலான நிரந்தர அரசியல் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிட்டப்போவதில்லை.
அது அவ்வளவு எளிதில் சாத்தியமாகக் கூடியதுமல்ல. எனவே தான் தமிழ்த் தேசியத்தின் வலிமிகுந்த எதிர்பார்ப்பை நீர்த்துப் போகச் செய்யும் அற்பத்தனமான செயல்களில் தமிழ் தரப்பு ஈடுபடுவதில் இருந்து தவிர்ந்துகொள்ள வேண்டும்.
போராட்டக்காரர்கள் முன்வைத்திருக்கும் ஆறு அம்சத் திட்டம்
போராட்டக்காரர்கள் முன்வைத்திருக்கும் ஆறு அம்சத் திட்டம் என்பது இந்நாட்டின் தேசிய அரசியல் நெருக்கடிக்கான தீர்வல்ல அது முறையற்ற நிருவாகத்தினாலும் பிழையான முடிவுகளாலும் சுயநலமிக்க தீர்மானங்களாலும் விளைந்த பொருதார நெருக்கடியால் விளைந்த தற்போதைய நடைமுறை வாழ்க்கைச் சிக்கலுக்கு ஒரு தீர்வைத் தேடுகின்ற ஒரு முயற்சி மாத்திரமேயாகும்.
இப்போதுள்ள மக்கள் எதிர்கொள்கின்ற நெருக்கடிகள் நிறைவேறும் போது தானாக மக்கள் தமது அடுத்த பணிகளைப் பார்க்கச் சென்றுவிடுவார்கள். அதற்கிடையில் தமிழ் தேசியத்தின் பெயரால் அரசியல் இலாபம் அடைய முனையும் குறுகிய புத்தி தமிழர் தேசியப் பிரச்சினைக்கு எத்தகைய தீர்வுகளையும் பெற்றுத் தரப்போவதில்லை.
தனிப்பட்ட ரீதியில் அரசியல்வாதிகள் போராட்டக்களச் செயற்பாட்டாளர்களுக்கு தமது ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவது வேறு, தமிழ்த் தேசியத்தின் பெயரால் ஆதரவு நல்குவது வேறு.
எனவே இந்த விடயத்தில் மிகக் கவனமாக தமிழ்த் தேசிய தரப்பு நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா சுட்டிக்காட்டியுள்ளார்.
| பதவி விலகல் கடிதத்தை அனுப்பினார் கோட்டாபய! சற்று முன்னர் வெளியான தகவல் |