இறுதி நிமிடம் வரையில் விறுவிறுப்பு: சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த இலங்கை ஏ அணி
கட்டாரின் தோஹாவில் உள்ள வெஸ்ட் எண்ட் பார்க் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2026 ஆசிய கிரிக்கெட் பேரவையின் வளர்ந்து வரும் அணிகள் ஆசியக் கிண்ண இறுதிப்போட்டியில், நடப்புச் சம்பியனான பாகிஸ்தான் ஏ அணியை வீழ்த்தி இலங்கை ஏ அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க த்ரில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் ஏ அணி, இலங்கைப் பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.
பாகிஸ்தான் தரப்பில் சகசிப் கான் (60), ஷமில் ஹுசைன் (40), ரோஹைல் நசீர் (37) மற்றும் அப்துல் சாமட் (33) ஆகியோர் ஓட்டங்களைச் சேர்த்த போதிலும், இலங்கைப் பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுத்தனர்.
ஒரு விக்கட்டை வீத்தினார்..
ரவிந்து பெர்னாண்டோ மற்றும் கருக்க சன்கேத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், வனுஜா சஹன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதுடன் வியாஸ்காந்த் நேர்த்தியாக பந்து வீசி ஒரு விக்கட்டை வீத்தினார்.
பாகிஸ்தான் ஏ அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 216 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
217 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணிக்கு லசித் குரூஸ்புள்ளே (26) மற்றும் சினெத் ஜயவர்தன (20) ஆகியோர் அதிரடித் தொடக்கத்தை அளித்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய நிஷான் மதுஷ்க ஒரு முனையில் நங்கூரமிட்டு ஆடி, 95 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 87 ஓட்டங்களைக் குவித்து அணியை வெற்றியின் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
எனினும், பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களான அலி ரசா 3 விக்கெட்கள் மற்றும் சுபியன் முகீம் 2 விக்கெட்கள் கைப்பற்றி திறமையான பந்து வீசியதனால் இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 198 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் தோல்வியின் விளிம்பிற்குச் சென்றது.
வெற்றிக்கு இன்னும் 19 ஓட்டங்கள் தேவைப்பட, கைவசம் ஒரேயொரு விக்கெட் மட்டுமே இருந்த நிலையில் மைதானத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
கடைசி விக்கெட்டுக்காக இணைந்த லஹிரு சமரகோன் ஆட்டமிழக்காது 11 ஓட்டங்களையும் மற்றும் கருக்க சன்கேத் ஆட்டமிழக்காது 4 ஓட்டங்களையும் பெற்று, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் அழுத்தத்தைச் சற்றும் பொருட்படுத்தாமல் நிதானமாகவும் துணிச்சலாகவும் பந்துகளை எதிர்கொண்டனர்.
41-வது ஓவரின் இறுதிப் பந்தில் லெக்-பை மூலம் ஓட்டம் எடுக்கப்பட்டு ஆட்டத்தின் ஓட்டங்கள் சமநிலையை எட்டியபோது ரசிகர்களின் ஆரவாரம் விண்ணை முட்டியது.
தொடர்ந்து 42-வது ஓவரின் மூன்றாவது பந்தில் அற்புதமான பவுண்டரியை விளாசி, 41.3 ஓவர்களில் 220 ஓட்டங்களை எட்டிய இலங்கை ஏ அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைத் தன்வசப்படுத்தியது.
முன்னதாக அரையிறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த இந்திய ஏ அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்த இலங்கை ஏ அணி, இந்த அபார வெற்றியின் மூலம் 2026 வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசியக் கிண்ணத்தைக் கம்பீரமாகக் கைப்பற்றியுள்ளது.

