ஏகே 12 ரக துப்பாக்கிகளை பயன்படுத்தி ரஷ்யாவில் இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி
ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து நடத்தப்பட்ட கூட்டு ராணுவப் பயிற்சியின் போது, இலங்கை இராணுவத்தினர் முதன்முறையாக ரஷ்ய தயாரிப்பான ஏகே - 12 ரகத் துப்பாக்கிகளைப் பயன்படுத்திச் சுடும் அனுபவத்தைப் பெற்றுள்ளனர்.
ரஷ்யா, சீனாவுடனான தனது கூட்டுறவை விரிவுபடுத்தி வரும் அதே வேளையில், இலங்கை போன்ற நாடுகளுடனும் தனது பாதுகாப்புப் பங்கான்மையை வலுப்படுத்தி வருவதை இந்தப் பயிற்சி பிரதிபலிக்கிறது.
ரஷ்யாவின் பிரிமோர்ஸ்கி க்ராய் பகுதியில் அமைந்துள்ள செர்ஜிவ்ஸ்கி பயிற்சி மையத்தில், 'வொல்வரின் டிரெயில் - 2026' திட்டத்தின் கீழ், ரஷ்ய மற்றும் இலங்கை இராணுவ வீரர்கள் கள அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டனர்.

முதலாவதாக, இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இத்தகைய கூட்டுப் பயிற்சியை ஏற்பாடு செய்ததற்காக ரஷ்ய அதிகாரிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக பயிற்சியில் பங்கேற்ற இலங்கை இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இந்த வாய்ப்பை நான் பெரிதும் மதிக்கிறேன். ரஷ்யாவிற்கு நான் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். எனவே, ரஷ்ய இராணுவ வீரர்களுடன் அறிவு, நடைமுறை அனுபவங்கள் மற்றும் சிறந்த உத்திகளைப் பரிமாறிக் கொள்ள இந்தப் பயிற்சி ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.
இக்கூட்டுப் பயிற்சி நடவடிக்கை கடந்த வாரம் நடைபெற்று முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.