சபாநாயகருக்கு எதிராகவும் பிரேரணை! ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை
நாடாளுமன்றத்தில் எதிரணி உறுப்பினர்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் சபாநாயகர் தனது நிலைப்பாட்டை நேற்றுமுன்தினம் புதன்கிழமை சபையில் தெளிவுபடுத்திய பின்னரே அவருக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை
"இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் தற்போதுதான் முதன்முறையாக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நாடாளுமன்றத்தில் 1978 இல் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தில் உப ஜனாதிபதிக்கு எதிராகக் கூட இவ்வாறு நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
எனவே, நாடாளுமன்றத்தில் எதிரணிகளின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்காவிட்டால் சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர நேரிடும்.
ஆகவே, தனது முடிவை சபாநாயகர் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்" -என்றும் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.




