மக்களின் நுகர்வு குறைவடைந்தது தான் பணவீக்கம் குறையக் காரணம்: ஐக்கிய மக்கள் சக்தி
இலங்கையில் நுகர்வு குறைக்கப்பட்டதன் காரணமாகவே பணவீக்கம் குறைந்துள்ளது, இதனை தவிர பொருளாதார சாதனை அல்ல என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழன் அன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் முன்னோக்கி செல்லும் வழிகள் குறித்தும் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
பணவீக்கம்
பணவீக்கம் 70 வீதத்தில் இருந்து 22.5 வீதமாக குறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி தமது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் நுகர்வு குறைந்ததன் காரணமாகவே பணவீக்கம் 22.5 சதவீதமாக குறைந்துள்ளது என ராஜகருண குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தில் இருப்பவர்களில் சிலர் முதலீட்டாளர்களிடம் தரகுப்பணம் கேட்டு முதலீட்டை சீர்குலைக்கிறார்கள்.
20 கிலோகிராம் அரிசி, அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களால் அவர்களுக்குப் பிடித்தமானவர்களுக்கே விநியோகிக்கப்படுகின்றன.
ஊடகச் சுதந்திரம்
இந்த சூழ்நிலையில் அரசாங்கம் எவ்வாறு நான்கு தூண்களில் பொருளாதாரத்தை கட்டியெழுப்பப் போகிறது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை அரசாங்கம் ஊடகங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், உத்தேச ஒலிபரப்பு ஆணையக யோசனையை கொண்டு வருகிறது.
இதன் மூலம் அரசாங்கம் விரும்புகின்ற செய்திகளை மாத்திரமே ஊடகங்கள் வெளிக்கொணர முடியும் என்பதுடன் ஊடகச் சுதந்திரம் நசுக்கப்படும் என்றும் ஹர்சன ராஜகருண சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |