ஜனாதிபதிக்கும் சஜித் பிரேமதாசவிற்குமிடையில் விசேட கலந்துரையாடல் (VIDEO)
சர்வகட்சி அரசை அமைப்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது,
“சர்வகட்சி அரசில் இணையுமாறு அனைத்துக் கட்சிகளையும் நாங்கள் அழைத்துள்ளோம். அதற்காக அரசியல் கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகின்றோம். நாட்டின் பொருளாதாரம் தற்போது இக்கட்டான நிலையில் உள்ளது.
இந்தநிலையில் இருந்து மீள அனைவரும் இணைந்து அரசின் அமைச்சுப் பதவிகளை ஏற்று சர்வகட்சி அரசை உருவாக்கி இந்த நாட்டைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நான் ஐக்கிய மக்கள் சக்திக்கு சர்வகட்சி அரசில் எங்களுடன் இணைந்து பணியாற்ற வருமாறு அழைக்கின்றேன். இவர்கள் அனைவரும் என்னுடன் பணியாற்றியவர்கள்.
எந்தப் பிரச்சினையும் இல்லை. நாம் ஒன்றாக வேலை செய்ய முடியும். 1941 ஆம் ஆண்டு, பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியானது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகித்துக்கொண்டு அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டது. முழு நாடாளுமன்றமும் அரசாக ஆக்கப்பட்டது. அதே மரபை நாமும் செயற்படுத்தலாம்.
1977 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தில் 5/6 அதிகாரம் பெற்று அரசு அமைக்கப்பட்டு நாடு கட்டியெழுப்பப்பட்டது. ஆனால், இப்போது 5/6 அதிகாரத்தாலும் சர்வகட்சி அரசு இல்லாமல் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.
ஒரே வழி சர்வகட்சி ஆட்சி மாத்திரமே ஆகும். சமீபத்திய வன்முறைச் செயல்கள் காரணமாக, நாங்கள் அவசரகால உத்தரவை விதிக்க வேண்டியிருந்தது. ஆனால், அவசரகால உத்தரவைத் தொடர்வதற்கு நான் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும், எதிர்கால பொருளாதார வேலைத்திட்டத்தின்போது சில சட்டங்கள் விதிக்கப்பட வேண்டும். அதற்கு அவசரகாலச் சட்டம் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல் - ராகேஸ்
இரண்டாம் இணைப்பு
மேலும்,நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளை தீர்ப்பதற்கு சர்வகட்சி அரசாங்கமல்ல. சர்வகட்சி நிர்வாகமொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டுமெனவும், சர்வகட்சி நிர்வாகத்தின் கீழ் நாடாளுமன்ற கண்காணிப்பு குழுக்களை நியமித்து அதன் ஊடாக நிர்வாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் ஆற்றிய கொள்கை பிரகடன உரையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு சகல கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில், ஜனாதிபதிக்கும்,சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளது.
இதன்போது சர்வகட்சி அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா டுவிட்டர் பதிவொன்றினையிட்டு தெரிவித்துள்ளார்.
3. …arbitrary arrests of demonstrators. Pres @RW_UNP formally invited @sjbsrilanka to an all/multi party government. Some were positive some negative. But all agreed to explore how to help #SriLanka out of crisis. So @RW_UNP proposed “all party governance” සර්ව පාක්ෂික පාලනයක්
— Harsha de Silva (@HarshadeSilvaMP) August 5, 2022
Discussing options for way forward for all/multi party #SriLanka government/program with Pres @RW_UNP. Opp Leader @sjbsrilanka ldr @sajithpremadasa and our alliance leaders @ManoGanesan @Rauff_Hakeem (rep Nizzam K) and our management com at meeting now at Pres Secretariat. pic.twitter.com/NMGkm4rtDp
— Harsha de Silva (@HarshadeSilvaMP) August 5, 2022
இதன்போது அவசரகாலச் சட்டத்தை நீக்கி, ‘அரகலயா’ போராட்டக்காரர்களை விடுவித்து, அதே நேரத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களை மிரட்டுவதையும்,தன்னிச்சையாக கைது செய்வதையும் நிறுத்துமாறும் எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கலந்துரையாடலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதமதாச , ஐக்கிய மக்கள் கூட்டணியின் பங்காளி கட்சிகளான தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேஷன், பிரதி தலைவர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்ரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் உள்ளிட்டோருடன் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.