சிவாஜிலிங்கத்தின் புகழுடலுக்கு வடக்கு மாகாண ஆளுநர் அஞ்சலி
வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளராகப் பணியாற்றியவரும், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான மறைந்த எம்.கே.சிவாஜிலிங்கத்தின் புகழுடலுக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று (16.11.2026) காலை நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.
உடல்நலக் குறைவு காரணமாக நேற்றுமுன்தினம் இரவு காலமான எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இறுதிக்கிரியைகள் இன்று வல்வெட்டித்துறையிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றன.
இதன்போது ஆளுநருடன் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், யாழ்ப்பாணம் மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மற்றும் வல்வெட்டித்துறை நகர சபையின் செயலாளர் ஆகியோரும் கலந்துகொண்டு அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த எம்.கே.சிவாஜிலிங்கம் தொடர்பில் ஆளுநர் வெளியிட்டுள்ள அஞ்சலிக் குறிப்பில், அவர் பல்வேறு பதவிகளை வகித்திருந்தபோதிலும், ஒருபோதும் தனக்காகவோ அல்லது தன்னைச் சார்ந்தவர்களுக்காகவோ தனிப்பட்ட உதவிகளையோ சலுகைகளையோ கோரியதில்லை என்றும், தனது மக்களின் உரிமைகளுக்காகவே குரல் கொடுத்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாம் இணைப்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை நகரம் முழுவதும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
தமிழ் தேசிய அரசியல் பரப்பில் நீண்டகாலமாகப் பயணித்து, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் தேசிய அபிலாஷைகளுக்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் மறைவு, வல்வெட்டித்துறை மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனை முன்னிட்டு, அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் முகமாக வல்வெட்டித்துறை நகரப் பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு, நகரம் முழுவதும் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
சிவாஜிலிங்கத்தின் மறைவு தமிழ் தேசிய அரசியல் பரப்பில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகப் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இணைப்பு
மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமான மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கத்தை இறுதிப் பயணமாக வழியனுப்பி வைப்பதற்காக அவரது சொந்த ஊரான வல்வெட்டித்துறை நகர் முழுமையான எழுச்சிக் கோலம் பூண்டுள்ளது.
இன்று காலை 10 மணிமுதல் ஆரம்பமாகவுள்ள இறுதி அஞ்சலி நிகழ்வுகளுக்காக, வல்வெட்டித்துறை நகர் இரவிரவாக அந்தப் பகுதி இளைஞர்களினால் மிகச் சிறப்பாகச் சோடிக்கப்பட்டுள்ளது.
அலங்காரம்
நகர் முழுவதும் வாழை மரங்கள் மற்றும் தோரணங்கள் கட்டப்பட்டு, தமிழ்த் தேசியக் கொடிகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், வர்த்தக சங்கங்கள் மற்றும் ஊடக இல்லங்களின் சார்பில் சிவாஜிலிங்கத்தின் நினைவஞ்சலிப் பதாகைகள் நகர் முழுவதும் பெருமளவில் கட்டப்பட்டுள்ளன.
அன்னாரது புகழுடலை வைத்துப் பொதுமக்கள் பூரண சுதந்திரத்துடனும் மரியாதையுடனும் அஞ்சலி செலுத்துவதற்கேற்ப விசேட பந்தல்களும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மண்ணின் மைந்தனை வழியனுப்பி வைக்கும் இன்றைய இறுதி நாளில், வல்வெட்டித்துறை நகர் வர்த்தகர்கள் முழுமையாகக் கடைகளை அடைத்துத் தமது மரியாதையைச் செலுத்தவுள்ளனர்.
கிரியைகள்
காலை 7 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் (கல்றோட் வீதி, நெடியகாடு) ஆரம்பக் கிரியைகள் இடம்பெற்றுள்ளன.

காலை 10 மணியளவில் வல்வெட்டித்துறை நகரில் விசேடமாக அமைக்கப்பட்ட இடத்தில் சிவாஜிலிங்கத்தின் புகழுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், அரசியல் பிரமுகர்களின் அஞ்சலி உரைகளும் இடம்பெறவுள்ளன.
அதனைத் தொடர்ந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, வல்வெட்டித்துறை - ஊறணி இந்து மயானத்தில் அன்னாரது தகனக்கிரிகைகள் உணர்வுபூர்வமாக நிறைவேற்றப்படவுள்ளன.

முதலாம் இணைப்பு
சிறுநீரக மாற்றுச் சத்திர சிகிச்சையின் பின்னர் ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், நேற்று முன் தினம் நள்ளிரவு காலமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமான மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கத்துக்கு (வயது 69) இறுதி அஞ்சலி செலுத்துவதற்காகத் தமிழர்கள் பெருந்திரளாக இன்று (16.11.2026) வல்வெட்டித்துறையில் திரளவுள்ளனர்.
மண்ணின் மைந்தனை வழியனுப்பி வைக்கும் இறுதி நாளில், வல்வெட்டித்துறை நகர் வர்த்தகர்கள் முழுமையாகக் கடைகளை அடைத்துத் தமது மரியாதையைச் செலுத்தவுள்ளனர்.
அன்னாரது பூதவுடல் வல்வெட்டித்துறைச் சந்தியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. அங்கு தமிழ்த்தேசிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலி உரைகள் இடம்பெற்றதன் பின்னர், இறுதிக்கிரியைகள் யாவும் நிறைவுபெற்று வல்வெட்டித்துறை - ஊறணி இந்து மயானத்தில் தகனக்கிரிகைகள் இடம்பெறவுள்ளன.
அன்னாரின் அவரது புகழுடலுக்குத் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - எரிமலை



