வடக்கு மாகாணத்தில் முதன் முறையாக சிசு செரிய பேருந்து சேவை ஆரம்பம்
வவுனியாவில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி கற்கும் மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், 'சிசு செரிய' பேருந்து சேவை வட மாகாணத்தில் முதன் முறையாக நேற்று (15) உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில், வவுனியா பேருந்து நிலையத்தில் இந்த அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது.
வட மாகாணத்திற்குள் 20 சிசு செரிய பேருந்துகள்
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, போக்குவரத்து அமைச்சுடன் இணைந்து மேற்கொண்டுள்ள விசேட ஏற்பாட்டின்படி, முதற்கட்டமாக வட மாகாணத்திற்குள் 20 'சிசு செரிய' பேருந்துகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் தொடக்கமாக, வவுனியா மாவட்ட பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பயன்பாட்டிற்காக இரண்டு புதிய 'சிசு செரிய' பேருந்துகள் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டன.
இந்த சேவையைப் பயன்படுத்தும் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து சாதாரண போக்குவரத்துப் கட்டணத்தில் அரைக்கட்டணம் மாத்திரமே அறவிடப்படும் என்பதுடன், எஞ்சிய அரைக்கட்டணத்தை அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும்.
இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஜெகதீஸ்வரன், எஸ்.திலகநாதன், வட மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் எஸ்.விமலேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.



