ஐ.நா பாதுகாப்பு பேரவை கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் பணிக்கான காலக்கெடு நீடிப்பு
ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் கடுமையான மனிதாபிமான நெருக்கடிகளுக்கு மத்தியில், அங்கு செயல்பட்டு வரும் ஐ.நா உதவி மையத்தின் பணிக்கான காலக்கெடுவை மேலும் ஓராண்டுக்கு நீடிக்க ஐநா பாதுகாப்பு பேரவை ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.
2021ஆம் ஆண்டு தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியது முதல், பெண்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்தச் சூழலில், பாதுகாப்பு பேரவையின் 15 உறுப்பு நாடுகளும் இந்த நீடிப்புக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.
முழுப் பணி
சீனாவால் தயாரிக்கப்பட்ட இந்தத் தீர்மானத்தில், ஆப்கானிஸ்தானில் ஐ.நா மேற்கொண்டு வரும் செயல்பாடுகளை மறுஆய்வு செய்து, அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐநா பொதுச்செயலாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய ஐநாவுக்கான சீன தூதர் ஃபு காங், ஆப்கானிஸ்தான் அரசு மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், குறிப்பாகப் பெண்களின் உரிமைகளை உறுதிசெய்து உலக அரங்கில் தங்களுக்குப் பொறுப்பான ஒரு பிம்பத்தை உருவாக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும், தலிபான்களால் தடை விதிக்கப்பட்டுள்ள ஐநா பெண் ஊழியர்களுக்கு முழுப் பணி சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது.