அமைச்சர் - பிரதி அமைச்சர் மோதல்!
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்கவிற்கும், பிரதி அமைச்சர் ஜனித கொடிதுவக்கவிற்கும் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் அரசாங்கத்திற்குள் பாரிய நிர்வாக நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் சிறீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நட்டத்தில் இயங்கும் சிறீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு இடைக்காலத் தலைமை நிர்வாக அதிகாரியை நியமிப்பது தொடர்பான சர்ச்சை வலுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பணிநீக்கம் செய்யப்பட்ட விமான நிறுவன ஊழியர் ஒருவரை மீண்டும் பணியில் அமர்த்துவது தொடர்பில் பிரதி அமைச்சரால் கூட்டப்பட்ட முறையான விசாரணை ஒன்றில் அமைச்சர் நேரடியாகத் தலையிட்டபோது, கடந்த திங்கட்கிழமை இந்நிலைமை உச்சக்கட்டத்தை எட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலையில் தொடங்கவிருந்த விசாரணையை மாலை வரை தாமதப்படுத்தி, பின்னர் கூட்டத்தை முன்கூட்டியே முடித்து வைத்ததன் மூலம் அமைச்சர், பிரதி அமைச்சரின் நடவடிக்கைகளை பலவீனப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
சிவில் விமானப் போக்குவரத்துப் பிரதி அமைச்சரின் அதிகார வரம்பிற்குள் வருகின்ற போதிலும், அமைச்சரின் இத்தகைய தலையீடு தேசிய விமான நிறுவனத்தின் கடுமையான நிர்வாகச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து முடக்கி வருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விமான நிறுவனத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் தலைமைத்துவ வெற்றிடம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள பின்னணியிலேயே இந்த அதிகாரப் போட்டி வெடித்துள்ளது. நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவின் அண்மைய விசாரணையின் போது, அதன் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார், கடந்த 16 மாதங்களாக ஒரு தலைமை நிர்வாக அதிகாரியை நியமிக்கத் தவறியமை குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
இரண்டு கட்ட நேர்காணல்கள் நடத்தப்பட்டு நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட போதிலும், ஒரு வருடம் மற்றும் நான்கு மாதங்களுக்கும் மேலாகப் பொருத்தமான ஒருவரை உள்ளூரிலோ அல்லது வெளியிலிருந்தோ கண்டுபிடிக்க முடியாமல் போனது ஒரு சோகமான நிலைமை என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த வெற்றிடத்தை நிரப்பும் நோக்கில், சிறீலங்கன் எயர்லைன்ஸ் தவிசாளர், நிறுவனத்தின் உள்ளக அதிகாரிகளில் ஒருவரை இடைக்காலத் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கத் திட்டமிட்டுள்ளதாக அண்மையில் அறிவித்தார். இதற்கமைய, மூன்று வாரங்களுக்கு முன்பு தகவல் தொழில்நுட்பத் தலைவர் மற்றும் வர்த்தகத் தலைவர் ஆகிய இரு உள்ளக நிர்வாகிகள் சுருக்கப்பட்டியலிடப்பட்டனர்.
இதில் பிரதி அமைச்சருடன் கலந்தாலோசிக்காமல், தகவல் தொழில்நுட்பத் தலைவரைத் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்க அமைச்சர் கருணாதிலக்க தனிச்சையாகத் தேர்ந்தெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், சிறீலங்கன் எயர்லைன்ஸின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் இடம்பெற்ற கடுமையான ஊழல் நடவடிக்கைகள் குறித்த குற்றச்சாட்டுகள் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, தகவல் தொழில்நுட்பத் தலைவரைப் பதவியேற்க வைக்கும் நடவடிக்கை திடீரென முடங்கியது.
தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் சாமர பெரேராவின் நிர்வாகத்தின் கீழ் அப்பிரிவில் பாரதூரமான தவறான நிர்வாகம் இடம்பெற்றுள்ளதாக உத்தியோகபூர்வ முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அவர் நிறுவனத்தின் எதிர்காலத்திற்கும் தொழில்முறை அம்சத்திற்கும் கடுமையான அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும் அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, உத்தியோகபூர்வ நியமனத்தை அமைச்சர் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள போதிலும், அவரை இடைக்காலத் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி உயர்த்துவதில் அமைச்சர் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதேவேளை, திங்கட்கிழமை நடைபெற்ற விசாரணையில் ஜே.வி.பி சார்ந்த தொழிற்சங்கம் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு, தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மண்டபத்திற்கு வெளியே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் அவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தகவல் தொழில்நுட்பத் தலைவர் நியமிக்கப்படுவதற்கு முன்னதாக, அவரது ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தொழிற்சங்கம் திட்டமிட்டுள்ளதால், சிறீலங்கன் எயர்லைன்ஸைச் சுற்றியுள்ள அரசியல் மற்றும் செயல்பாட்டு மோதல்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன.
எனினும் இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கத் தரப்பில் அதிகாபூர்வமான தகவல்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.