வர்த்தகர்களிடம் பெருந்தொகை பணம் அபகரித்த இரண்டு சகோதரிகள் கைது
பல்வேறு வர்த்தகர்களிடம் இருந்து பெருந்தொகைப் பணத்தைக் கப்பமாகப் பெற்று, அதனை சிறைச்சாலைகளுக்குள் இருக்கும் குண்டர்களின் வழக்குகளுக்காக செலவிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த உடன்பிறந்த சகோதரிகள், தற்போதைக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறயலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் இருக்கும் எம்பிலிப்பிட்டிய ருவன் என்றழைக்கப்படும் பிரபல பாதாள உலகக்கும்பல் உறுப்பினரின் வழிகாட்டலின் கீழ் குறித்த சகோதரிகள் இருவரும் பல்வேறு வர்த்தகர்களிடம் இருந்து பெருந்தொகைப் பணத்தைக் கப்பமாகப் பெற்றுள்ளனர்.
மேலதிக விசாரணை
அவ்வாறு பெறப்படும் பணத்தைக் கொண்டு எம்பிலிப்பிட்டிய ருவன் உள்ளிட்ட குண்டர்களின் வழக்குச் செலவுகளைக் கவனிப்பது, பிணைத் தொகைகளை வைப்புச் செய்வது, வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை மாற்றம் செய்வது உள்ளிட்ட விடயங்களை குறித்த சகோதரிகள் மேற்கொண்டுள்ளனர்.
அதே முறையில் கிரிபத்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடமிருந்து பத்து லட்சம் ரூபா கப்பம் பெறுவதற்காக எம்பிலிப்பிட்டிய ருவன் , சிறைச்சாலைக்குள் இருந்தே தொலைபேசி மூலம் அச்சுறுத்தியுள்ளார்.

குறித்த பணத் தொகை வைப்பிலிடப்பட்ட வங்கிக் கணக்கு விபரங்களின் அடிப்படையில் குறித்த சகோதரிகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.