மாவீரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள சிங்கள - முஸ்லிம் சமூகத்தினரின் பெயர்கள்
யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள திலீபன் நினைவிடத்திற்கு அருகில், மாவீரர் வாரத்தை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள நினைவு கண்காட்சியில் 28,341 உயிரிழந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவுப் பலகை திரைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதில் மிகவும் கவனத்தை ஈர்க்கும் விடயமாக, தமிழர்கள் மட்டுமன்றி சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்தவர்களின் பெயர்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளமை முக்கியத்துவம் பெறுகிறது.
சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகம்
தமிழ் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் பங்கேற்புடன் நவம்பர் 21 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்தக் கண்காட்சியில், உயிரிழந்த இரண்டு சிங்கள நபர்களின் பெயர்கள் தனிப் பிரிவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொதுவாகத் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டமாகப் பார்க்கப்படும் இந்த வரலாற்றில், சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்தவர்களும் இணைந்து பயணித்திருந்தனர் என்பதை இந்தப் பெயர் விபரங்கள் நினைவூட்டுகின்றன.

நவம்பர் 21 ஆம் திகதி ஆரம்பமான இந்தப் பெயர்ப்பலகைக் கண்காட்சி, மாவீரர் நாளான நவம்பர் 27 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது.
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும், விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் தொடர்ந்தும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகவே உள்ளது.
உயிரிழந்த தமது உறவினர்களை தனிப்பட்ட ரீதியில் நினைவுகூர்வதற்குத் தடையில்லை என அரசாங்கம் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ள போதிலும், தடைசெய்யப்பட்ட அமைப்பை ஊக்குவிக்கும் வகையிலான செயற்பாடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.