நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்ட டயானா கமகே! தீர்ப்பு திகதி அறிவிப்பு
புதிய இணைப்பு
இலங்கையில் செல்லுபடியாகும் விசா இன்றி தங்கியிருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவுக்கு, எதிர்வரும் ஜனவரி 14ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
குறித்த வழக்கு இன்று (26) கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது தீர்ப்பு திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரதிவாதியின் கைரேகைகளைப் பெற்று அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
இலங்கையில் செல்லுபடியாகும் விசா அனுமதிப்பத்திரம் இன்றி தங்கியிருந்த குற்றச்சாட்டை தாம் ஒப்புக்கொள்வதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே அறிவித்துள்ளார்.
இந்த வழக்கு இன்று (26) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவர் இவ்வாறு அறிவித்துள்ளார்.
வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு
டயானா கமகே சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மொஹான் செனவிரத்ன, குறித்த குற்றச்சாட்டை பிரதிவாதி ஒப்புக்கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணைகள் சற்று நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்புரிமை பறிப்பு
2016 முதல் 2020 வரையிலான பல்வேறு காலப்பகுதிகளில் செல்லுபடியாகும் வீசா அனுமதிப்பத்திரம் இன்றி இலங்கையில் தங்கியிருந்ததாகக் குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
கடவுச்சீட்டுப் பெறுவதற்காகத் தவறான தகவல்களை வழங்கியமை உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுகளின் கீழ், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) இவருக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
பிரித்தானிய குடியுரிமையை கொண்டிருந்தமை மற்றும் செல்லுபடியாகும் இலங்கை குடியுரிமைச் சான்றிதழ் இல்லாத காரணத்தால், 2024 மே மாதம் உயர் நீதிமன்றத்தால் அவரது நாடாளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.