இலங்கையில் சிங்கள அரசின் பயங்கரவாத தடைச்சட்டம்!
இலங்கையில் சிங்கள அரசின் பயங்கரவாத தடைச் சட்டம்! பொதுவாக மிகவும் மோசமான சட்டம் என்பது எல்லோருக்கும் தெரிந்த என்பதை விட உலகமே வெறுக்கும் சட்டம். இந்த சட்டத்தை நரி மார்க் ஜே.ஆர். ஜெயவர்தென இறுக்கிக் கொண்டு வந்தார்.
இந்த சட்டத்தினால் ஆயிரக்கணக்கான தமிழ் வாலிபர்கள்; பெண்கள் என்று நான் அறிய 30 ஆண்டுகள் கடந்தும் இன்னும் சிறையில் உள்ளார்கள்.மிகவும் மோசமான சித்திரவதை அடங்கிய இந்த சட்டம் இன்னும் இலங்கையில் உள்ளது.
இந்த சட்டத்தினால் கடந்த 21 மாதங்களாக ஈஸ்டர் குண்டு வெடிப்பினால் கைது செய்யபட்டு சோனக குழுவொன்று சுமார் 50 பேர் சிறையில் உள்ளார்கள்.
இந்த சட்டத்தை நீக்க வீண்டும் என்று உலக மனித உரிமை அமைப்புகள் இலங்கை அரசுக்கு இன்னும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், 43 வருடங்களின் பின்னர் சர்வதேச நியதிகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கொண்டுவரும் நோக்கத்துடன்-திருத்தங்களை மேற்கொண்டுள்ளோம் என்று வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதிய ஆண்டின் முதலாவது இராஜதந்திர மாநாட்டின்போது, வெளிநாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இராஜதந்திரிகளுக்கு வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் நேற்று உரையாற்றினார்.
மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் 2021 அமர்வில், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும், மனித உரிமைகள் பேரவை உட்பட ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்ந்தும் ஈடுபடுவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியதை அமைச்சர் நினைவு கூர்ந்தார்.
43 வருடங்களின் பின்னர் சர்வதேச நியதிகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கொண்டுவரும் நோக்கத்துடன் திருத்தப்பட்டு வருவதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
உத்தேசத் திருத்தங்கள் அடங்கிய சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் இறுதி அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சட்டமூலத்தை சமர்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
பல மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட நீண்ட கலந்துரையாடலின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டம் திருத்தப்பட்டு வருவதாக அமைச்சர் விளக்கமளித்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் முக்கிய திருத்தங்களில் தடுப்புக் காவல் உத்தரவு, கட்டுப்பாட்டு உத்தரவு, நீதித்துறை மீளாய்வு உத்தரவுகளை வெளிப்படையாக அங்கீகரித்தல் தொடர்பான பிரிவுகளில் திருத்தங்களை மேற்கொள்ளுதல், நீண்ட கால தடுப்புக் காவலில் வைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்குகளை விரைவாகத் தீர்த்தல், சுதந்திரத்துக்கு இடையூறு விளைவிக்கும் பிரிவுகளை இரத்துச் செய்தல், நீதிவான்கள் மற்றும் நீதித்துறை மருத்துவ அதிகாரிகளை அணுகுவதற்கான விதிகளை வெளிப்படுத்துதல் மற்றும் அறிமுகப்படுத்துதல், தடுப்புக் காவலில் உள்ள காலத்தில் துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதைகளைத் தடுத்தல், குடும்பத்துடன் தொடர்புகொள்வதற்கான உரிமை, நீண்ட கால கைதிகளுக்கு பிணை வழங்குதல் மற்றும் வழக்குகளை நாளாந்தம் விசாரணை செய்தல் போன்ற பிரிவுகளிலான திருத்தங்கள் உள்ளடங்கும்.
நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 13ஆவது பிரிவின் கீழ் ஆலோசனை சபையொன்றை ஸ்தாபிப்பதையும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவல் உத்தரவு அல்லது கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட எவருக்கும் அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோருவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தண்டனை அனுபவித்து வந்த 16 விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டதுடன், பயங்கரவாதச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டின் கீழ் நீண்ட காலமாக நீதிமன்றக் காவலில் உள்ள கைதிகளை விடுதலை செய்வதற்கான சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படிஇ 2022 ஜனவரி 13 நிலவரப்படி மேலும் 13 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள திரு. சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பான வழக்கின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்தும் வெளிநாட்டு அமைச்சர் குறிப்பிட்டார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிணை வழங்குவதை எதிர்க்கப் போவதில்லை என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் அறிவித்துள்ளார்.
தொல்பொருள் பாரம்பரிய முகாமைத்துவம் தொடர்பான ஜனாதிபதி செயலணி தொடர்பில்இ தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் பிரதிநிதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்!மனோ கணேசன்! பயங்கரவாத தடை சட்டம் மீள் திருத்தப்படும் வர்த்தமானி பிரகடனம் வெளியாகியுள்ளது.
ஐ.நா மனித உரிமை ஆணையகத்தை, ஐரோப்பிய ஜிஎஸ்பியை நோக்கி அரசு சார்பாக வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், இதை வேறு வழியில்லாமல் அறிவித்துள்ளார்.
எனினும் இதுவும் ஒரு முன்னேற்றம் தான். ஆனால் இச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்ற எமது குரலை நாம் நிறுத்திவிடக்கூடாது. அதேவேளை, 'உள்நாட்டில் எம்முடன் பேசுங்கள்.
இந்தியா, அமெரிக்கா, ஐநா என வெளி சக்திகளுடன் பேசாதீர்கள்' என எமக்கு வகுப்பு எடுத்து அறிவுரை கூறுபவர்களுக்கும்,இலங்கை அரசியலை இன்னமும் சரியாக புரிந்துகொள்ளாத அரசியல் குழந்தைகளுக்கும் இது சமர்பணம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
வெளிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதர்களை அழைத்து,பயங்கரவாத தடை சட்ட திருத்தங்கள் பற்றி அறிவித்துள்ளமை மற்றும் இதுபற்றிய வர்த்தமானி வெளியாகியுள்ளமை தொடர்புகளில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது என்னை பொறுத்தவரையில், திருத்தம் அல்ல, இச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
அதற்கான காலம் இன்று கணிந்து விட்டது என நினைக்கிறேன். அவசர நிலைமைகளுக்கு சாதாரண சட்டங்களே போதும். அதி அவசரம் ஏற்படுமானால், சடுதியாக இந்த சட்டத்தை மீள உடன் கொண்டும் வரலாம்.
ஒரே நாளில் அரசியலமைப்பு திருத்தங்களையே கொண்டு வந்தவர்களுக்கு இது பெரிதல்ல. ஆனால், இன்று சட்ட புத்தகங்களில் இருந்து இச்சட்டம் முழுமையாக அகற்றப்படுவது அவசியம்.
ஏனெனில் போர் முடிந்த பத்து ஆண்டுகள் ஆன பிறகும் அமுலில் இருக்கும் இச்சட்டம் ஏற்கனவே கணிசமான துன்புறுத்தல்களை தந்து கொண்டுதான் இருக்கிறது.
குறிப்பாக தமிழ் பேசும் மக்களை நோக்கி இது பாய்கிறது. ஆனால், இதில் நடப்பு ராஜபக்ச அரசை மட்டும் குறை கூற முடியாது. இந்த அரசு மட்டுமல்ல. எந்த இலங்கை அரசும் முழுமையாக இச்சட்டத்தை நீக்க முன்வரவில்லை.
இந்த சட்டத்தால் பெரிதும் பாதிக்கப்படும் தமிழ், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்வாதிகள் சிலரே இச்சட்டம் முழுமையாக நீக்க கூடாது என கொடி பிடிக்கிறார்கள்
1979ம் ஆண்டின் 48ம் இலக்க பயங்கரவாத தடை சட்டம் மீள திருத்தப்படுகிறது என்ற வெளிவிவகார அமைச்சரால், ஜனவரி 21ம் திகதி வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி பிரகடனம், எமக்கு ஒரு அடிப்படை உண்மையை மீளவும் எடுத்து உரைக்கிறது.
ஐநாவோ,அமெரிக்காவோ, ஐரோப்பிய யூனியனோ, இந்தியாவோ, ஏதாவது வெளி சக்திகள் சொன்னால்தான் இந்த அரசு கொஞ்சமாவது நகருகிறது. இதுதான் இங்கே கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயம்.
'உள்நாட்டில் எம்முடன் பேசுங்கள். இந்தியா, அமெரிக்கா, ஐநா என சக்திகளுடன் பேசாதீர்கள்' என எமக்கு வகுப்பு எடுத்து அறிவுரை கூறுபவர்களுக்கும், இலங்கை அரசியலை இன்னமும் சரியாக புரிந்துகொள்ளாத அரசியல் குழந்தைகளுக்கும் இது சமர்பணம்.
ஆனால் அன்று தொட்டு இன்று வரை ஒரு சோனக எம்பியாவது இந்த சட்டத்தை நீக்க வேண்டுமென்று வாய் திறந்ததுண்டா?கடைசியாக ரிசாத் எம்பி இந்த சட்டத்தினால் கம்பி எண்ணிட்டு வந்துள்ளார்.
நாடாளுமன்றிலோ அல்லது வெளியிலோ அல்லது பலம் பொருந்திய நாட்டுத் தூதுவர்களுடனோ ஒரு நாளாவது ஒரு குரல் கொடுத்ததுண்டா?
மைத்திரி ஆட்சியில் ரணிலைக் காப்பாற்ற வேண்டும் என்று சோனக அரசியல் வியாபாரிகள் கறுத்தக் கோர்ட் அணிந்து கொண்டு வரிந்து கட்டிக் கொண்டு கொழும்பு உயர் நீதிமனற்றக் கட்டிடத்தை ஆர்பரித்த கதையை மறந்து விட்டோம்.
சகல தமிழ் தரப்பும் இந்தக் கொடிய சட்டத்தை வெறுக்கும் போது மனித குலத்திக்கே சாபக்கேடான இந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்று ஏன் இன்னும் சோனக எம்பிகள் குரல் கொடுக்க முடியவில்லை!
ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன்

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
