சிங்கப்பூரின் முன்னாள் அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரனுக்கு சிறை தண்டனை
சிங்கப்பூரின் முன்னாள் அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரனுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
62 வயதான ஈஸ்வரன் சுமார் நான்கு இலட்சம் சிங்கப்பூர் டொலர்கள் பெறுமதியான பரிசுப் பொருட்களை பெற்றுக்கொண்டதாகவும், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தார் எனவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
ஃபோர்மிளா வன் க்ரோன்ப்ரீ மோட்டார் போட்டிகளுக்கான நுழைவு சீட்டுகள், சைக்கிள்கள், மதுபானம் மற்றும் தனியார் ஜெட் பயணம் போன்றவற்றை முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் பரிசாக பெற்றுக் கொண்டார் என தெரிவிக்கப்படுகிறது.
அதிகார துஷ்பிரயோகம்
இந்த குற்றச்செயல்களுக்காக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனுக்கு ஒரு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார் எனவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 7ஆம் திகதி முதல் முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியம் ஈஸ்வரன் சிறை தண்டனை அனுபவிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
சிங்கப்பூரில் அரசியல்வாதிகளுக்கு கூடுதல் கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. உலகில் அரசியல்வாதிகளுக்கு அதிகளவு கொடுப்பனவு வழங்கப்படும் நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர் திகழ்கின்றது.
கையூட்டல்
இவ்வாறான ஒரு பின்னணியில் பதவியில் இருக்கும்போது பரிசு பொருட்களை பெற்றுக் கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு பரிசு பொருட்களை பெற்றுக் கொள்வது பொது மக்களுக்கு சேவையாற்றுவதில் இடையூறுகளை ஏற்படுத்தும் எனவும் பக்க சார்பு நிலைகளை உருவாக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
எனவே, அரசியல்வாதிகள் இவ்வாறு பரிசு பொருட்களை பெற்றுக் கொள்வது கையூட்டலாகவே கருதப்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் அரசியல் வரலாற்றில் 50 ஆண்டுகளில் முதல் தடவையாக தண்டனை விதிக்கப்படும் அரசியல்வாதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |