சவூதி எண்ணெய் குழாய்த் தொடர் முடக்கம்: உலகளாவிய எண்ணெய் விநியோகம் குறையும் அபாயம்
சவூதி அரேபியாவின் பிரதான கிழக்கு-மேற்கு மசகு எண்ணெய் குழாய்த்தொடர் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால் அதன் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்த சில நாட்களுக்குள் அது மீள இயங்காவிட்டால் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 4 சதவீத இழப்பு ஏற்படும் என வர்த்தகர்கள் எச்சரித்துள்ளனர்.
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருந்த சூழலில், சவூதி அரேபியா தனது தினமும் 4 மில்லியன் பீப்பாய்கள் மசகு எண்ணெயை செங்கடலில் உள்ள யான்பு துறைமுகத்திற்குத் திருப்பி அனுப்ப இந்த குழாய்த்தொடரையே பயன்படுத்தி வந்தது.
தற்போது இந்த குழாய்த்தொடர் முடங்கியுள்ளதால், யான்பு துறைமுகத்தில் உள்ள இருப்புக்கள் மூலம் இன்னும் 5 முதல் 7 நாட்களுக்கு மாத்திரமே ஏற்றுமதியைத் தொடர முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் விலையேற்றம்
இந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள சேதங்களைச் சீரமைக்க 5 முதல் 6 வாரங்கள் வரை செல்லக்கூடும் என ஒரு தரப்பும், விரைவில் பகுதியளவில் பணிகளைத் தொடங்க முடியும் என மற்றொரு தரப்பும் தெரிவித்து வருகின்றன.

இருப்பினும் சவூதி அரசு இந்த சீரமைப்புப் பணிகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதையும் இன்னும் வெளியிடவில்லை.
ஏற்கனவே சர்வதேசச் சந்தையில் எரிபொருள் விலையேற்றம் மற்றும் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், சவூதியின் எண்ணெய் விநியோகமும் குறைந்தால் உலகளாவிய ஆற்றல் நெருக்கடி மேலும் தீவிரமடையும் என சர்வதேச ஆற்றல் முகமை (IEA) கவலை வெளியிட்டுள்ளது.