சிக்கலில் இலங்கையின் சுகாதாரத்துறை - எச்சரிக்கும் மருத்துவ வல்லுநர்கள்
இலங்கையில் தற்போது மருத்துவ நிபுணர்களுக்கு பாரிய வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இது நாட்டின் சுகாதாரத் துறைக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாகவும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும், கணிசமான எண்ணிக்கையிலான மருத்துவ நிபுணர்கள் புலம்பெயர்வை தெரிவு செய்துள்ளனர் எனவும் சில நிபுணர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமை, இலங்கையின் நலிவடைந்த சுகாதாரத் துறைக்கு மேலும் சிக்கல்களை தோற்றுவித்துள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
4,299 மருத்துவ நிபுணர்கள் தேவை
அத்துடன் அண்மையில், திருத்தப்பட்ட மருத்துவர்களின் 60 வயதிற்குள் ஓய்வுபெறும் திட்டமும் பிரச்சினையை தீவிரமாக்கியுள்ளது.
இந்தநிலையில் 2024 ஆம் ஆண்டிற்குள் நாட்டிற்கு 4,299 மருத்துவ நிபுணர்கள் தேவைப்படுவதாக சுகாதார அமைச்சு மதிப்பிட்டுள்ளது.
வைத்தியதுறையினரின் இடமாறுதல் பட்டியலின்படி, இருதயநோய் நிபுணர்கள், நுண்ணுயிரியல் நிபுணர்கள், தோல்நோய் நிபுணர்கள், அவசரகால மருத்துவர்கள், மயக்கவியல் நிபுணர்கள் மற்றும் நோயியல் நிபுணர்கள் உட்பட 750 பணியிடங்கள் இந்த ஆண்டுக்குள் அவசரமாக நிரப்பப்படவேண்டியுள்ளன.
உடனடி ஓய்வு
இந்த சந்தர்ப்பத்தில் அதிகாரிகள் உடனடியாகச் செயற்படத் தவறினால், அடுத்த
ஆண்டுக்குள் தேவைப்படும் மருத்துவ நிபுணர்களின் எண்ணிக்கை 1,000ஐத் தாண்டும்
என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
இலங்கையில் தற்போது சுமார் 2,007 நிபுணர்கள் மட்டுமே உள்ளனர், இந்த எண்ணிக்கை பொது மக்களின் மருத்துவத் தேவைகளுக்குப் போதுமானதாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 60 முதல் 63 வயதுக்குட்பட்ட 300 மருத்துவ நிபுணர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் உடனடி ஓய்வு பெறுவார்கள் என்பது பிரச்சினையை மேலும் அதிகரிக்க செய்யும்.
இதேவேளை, நாட்டில் உள்ள 18 இருதய சத்திரசிகிச்சை நிபுணர்களில் ஒன்பது பேர் சேவையை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் நாட்டில் உள்ள பல இதய அறுவை சிகிச்சை பிரிவுகள் மூடப்படும் அபாயம்
உள்ளது. மேலும் கொழும்பு, காலி மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள சில சிறப்புப் பிரிவுகளும் இதில்
அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.