ஷிரந்தியை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதில் சிக்கல்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
புதிய இணைப்பு
முன்னாள் முதற் பெண்மணி ஷிரந்தி ராஜபக்சவுக்கு, தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப்பிரிவில், அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
ஷிரந்தி ராஜபக்ச மீதான வழக்கு, இன்று (13) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், அவர் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவில்லை.
ஷிரந்தி ராஜபக்சவிற்காக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, சிறையில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஷிரந்தி ராஜபக்ச நேற்று (12) கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய அறுவை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள வழக்கு
மேலும், அவர் தற்போது திறந்த இதய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதன்போது அரச தரப்புக்காக முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீபா பீரிஸ், சந்தேகநபர் நேற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது உண்மை தான் என்றாலும், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுவது குறித்து சிறை அதிகாரிகளுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
அதன்படி, நீதிமன்றத்தில் சிறை அதிகாரிகளிடம் உரையாற்றிய தலைமை நீதிபதி, ஷிரந்தி ராஜபக்சவுக்கு இன்று திறந்த இதய அறுவை சிகிச்சை நடைபெறுகிறதா என்பதை உடனடியாக விசாரித்து தமக்கு தெரிவிக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சம்பந்தப்பட்ட அறிக்கை கிடைக்கும் வரை, இந்த வழக்கு இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதயவியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்றுவரும் ஷிரந்தி ராஜபக்ச, இன்று நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளார்.
அரச வங்கியிலிருந்து பெறப்பட்ட ரூ. 10 மில்லியனை முறைகேடாக பயன்படுத்திய ஊழல் மற்றும் பொதுச் சொத்துச்சட்டத்தின் கீழ் உள்ள குற்றச்சாட்டுகளின் பேரில், ஷிரந்தி ராஜபக்ச 7ஆம் திகதி கைது செய்யப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வைத்திய அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தல்
இதனையடுத்து சிறைச்சாலை வைத்தியர்களின் வைத்திய பரிந்துரைகளின் அடிப்படையில், அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் செனக பல்லத்தன்ன தெரிவித்துள்ளார்.

வைத்தியர்களின் ஆலோசனைக்கமைய ஷிரந்தி ராஜபக்சவை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த முடியாவிட்டால், அது தொடர்பான வைத்திய அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஊடக செ ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், சம்பவம் தொடர்பாக தான் கைது செய்யப்படும் பட்சத்தில், முன்பிணையில் தன்னை விடுவிக்க உத்தரவிடக்கோரி ஷிரந்தி ராஜபக்ச தாக்கல் செய்திருந்த முன்பிணை மனுவை நீதவான் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.