பதற்றத்தில் பிரபல அரசியல்வாதிகள்! ஆபத்தான நபரின் வாக்குமூலத்தில் அடுத்தடுத்து சிக்கவுள்ள பலர்
சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் வெளிப்படுத்திய தகவலின்படி அடுத்து வரும் நாட்களில் மேலும் பல அரசியல்வாதிகள் விசாரணைக்காக அழைக்கப்பட உள்ளதாக மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட ஷிரான் பாசிக்குடன் நெருங்கிய தொடர்பினை பேணி, அவரிடமிருந்து கோடிக்கணக்கான பணம் மற்றும் சலுகைகளை பெற்றதாக முன்னாள் அமைச்சர்கள், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட 10 முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சர்ச்சைக்குரிய கட்டுமான அனுமதி
இதன் ஒரு கட்டமாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடமும் நேற்று (03) சுமார் 4 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்தது.
ஷிரான் பாசிக் சொந்தமானது என்று கூறப்படும் தெஹிவளை கடற்கரையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கான சர்ச்சைக்குரிய கட்டுமான அனுமதி தொடர்பாக இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
அவர் முன்னாள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சராக இருந்தபோது குறித்த ஹோட்டல் கட்டப்பட்டமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
பல அரசியல்வாதிகளிடம் விசாரணை
ஹோட்டல் கட்டப்பட்ட நேரத்தில் பிரதி அமைச்சராக இருந்த அருந்திக பெர்னாண்டோ, அந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார் என்பது விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
இதேவேளை, தெஹிவளை - கல்கிஸ்ஸ முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்கவிடமும் மத்திய குற்றப் புலனாய்வுப்பிரிவு (CCID) (01) திகதி சுமார் நான்கு மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்திருந்ததது.
இதற்கமைய, எதிர்வரும் காலங்களில் மேலும் பல அரசியல்வாதிகள் விசாரணைக்காக அழைக்கப்பட உள்ளதாக மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.