இலங்கையில் ஆபத்தான நபரின் பல கோடி ரூபா சொத்துக்கள் பறிமுதல்
நாட்டில் மிகவும் ஆபத்தான போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாஷிகின் 10 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான சொத்துக்கள் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் முடக்கப்பட்டுள்ளன.
போதை பொருள் கடத்தல்கள் மூலம் ஈட்டப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும், சொத்துக்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முடக்கப்பட்ட சொத்துக்களில் போரலெஸ்கமுவ - தெஹிவளை வீதியில் அமைந்துள்ள 3 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான உடற்பயிற்சிக் கூடமும் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது.
சொத்துக்கள் பறிமுதல்
மேலும், தம்புள்ளையில் அமைந்துள்ள 3 கோடி ரூபாய் பெறுமதியான காணி மற்றும் சுற்றுலா பங்களா, யக்கல பகுதியில் அமைந்துள்ள 3 கோடி ரூபாய் பெறுமதியான சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு என்பனவும் இந்த சொத்துக்களுக்குள் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஷிரான் பாஷிக் இந்தச் சொத்துக்கள் அனைத்தையும் தனது தந்தை, மகன் மற்றும் மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவரின் பெயரில் கொள்வனவு செய்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் இந்தச் சொத்துக்களை அரச உடமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
குறித்த கடத்தல்காரருக்கு சொந்தமான வேறு பல சொத்துக்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.