யாழ். காங்கேசன்துறையை வந்தடைந்த சிவகங்கை கப்பல்
புதிய இணைப்பு
நாகை துறைமுகத்திலிருந்து 83 பயணிகளுடன் காங்கேசன்துறைக்கு புறப்பட்ட சிவகங்கை கப்பலானது இன்று (22) மதியம் 12.15 மணியளவில் காங்கேசன்துறையை (KKS) வந்தடைந்துள்ளது.
83 பயணிகள் குறித்த கப்பலில் அங்கிருந்து வருகைதந்ததுடன் 83 பேர் இங்கிருந்து செல்லவுள்ளனர்.
பிற்பகல் 1.30 அளவில் காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் பயணிகள் போக்குவரத்து கப்பல் நாகபட்டினத்தை சென்றடையவுள்ளது.
கப்பல் சேவை
இந்த பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது செவ்வாய்க் கிழமை தவிர்ந்து வாரத்தின் 6 நாட்களும் இடம்பெறும் என சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
சிவகங்கை கப்பல் நாகை துறைமுகத்திலிருந்து 83 பயணிகளுடன் இலங்கை காங்கேசன்துறை நோக்கி புறப்பட்டுள்ளது.
இந்தியா - இலங்கைக்கு இடையிலான இரு நாட்டு கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக 2003ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நாகையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பன்னாட்டு பயணியர் கப்பல் போக்குவரத்து சேவை தொடக்கப்பட்டது.
தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கப்பல் சேவை
இது சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், புயல், மழை, கடல் சீற்றம், சீதோஷ்ண நிலை உள்ளிட்ட காரணங்களால் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் தற்காலிகமாக கப்பல் சேவையானது நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் சிவகங்கை கப்பல் போக்குவரத்துக்கு தயாரான நிலையில், இந்தியா, இலங்கை இடையிலான கப்பல் சேவை மீண்டும் இன்று துவங்கும் என கப்பலை இயக்கும் நிறுவனம் அறிவித்தது.
இதையடுத்து இன்று கப்பலில் பயணிக்க முன்பதிவு செய்த பயணிகள், நாகை பயணியர் முனையத்திற்கு அதிகாலை முதல் வரத் துவங்கினர்.
காங்கேசன்துறைக்கு பயணம்
அதனை தொடர்ந்து நாகை பயணியர் முனையத்திற்கு வருகை தந்த 83 பயணிகளின் உடமைகள் மற்றும் பயணச்சீட்டை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பியதை தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் கப்பலில் பயணிகள் ஏற அனுமதிக்கப்பட்டனர்.
அதனை தொடர்ந்து நாகை துறைமுகத்தில் இருந்து இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மும்மத பிரார்த்தனையுடன் கப்பல் சேவையானது கொடியசைத்து துவக்கப்பட்டது.
தொடர்ந்து பயணிகள் நாகை துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் இலங்கை காங்கேசன்துறைக்கு பயணத்தை மேற்கொண்டனர்.
3 மாதங்களுக்குப் பின் நாகையில் இருந்து காங்கேஷன்துறைக்கு கப்பல் சேவை மீண்டும் துவங்கியதால், இந்திய - இலங்கை இருநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



