தாய்லாந்தில் கடும் வெள்ளம்: பேங்கொக்கில் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு - மக்களுக்கு அவசர எச்சரிக்கை
தாய்லாந்தின் தலைநகரான பேங்கொக்கில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளதுடன், நாட்டின் பொருளாதாரத்திற்கு சுமார் 320 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வாரம் பெய்த தொடர்மழையினால் தலைநகர் பேங்கொக்கின் பல பகுதிகள் இடுப்பளவு நீரில் மூழ்கியதுடன், நகரின் வடிகால் அமைப்புகளும் செயலிழந்தன.
செப்டெம்பர் 16 ஆம் திகதி முதல் தாய்லாந்தின் 41 மாகாணங்களை பாதித்துள்ள இந்த வெள்ளப்பெருக்கில் இதுவரை குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 580,000-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
வீடுகளில் முடங்கிய மக்களுக்கு சிறப்பு சலுகைகள்
வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதிகளில் வசிக்கும் 80,000 க்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் முடங்கியுள்ள நிலையில், அவர்களுக்கு நடமாடும் சமையலறைகள் மற்றும் படகுகள் மூலம் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

தலைநகர் பேங்கொக்கில் மட்டும் சுமார் 5,901 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு 234 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 0.3 சதவீத வீழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய இந்த வெள்ளப்பெருக்கால், ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கு சுமார் 11 பில்லியன் முதல் 12.3 பில்லியன் பாட் வரை இழப்பு ஏற்படும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
உடனடியாக வெளியேறுமாறு எச்சரிக்கை
இதேவேளை, நாட்டின் கிழக்குக் கடலோர மாகாணமான ராயோங்கில் அமைந்துள்ள இரு நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்களை உடனடியாக வெளியேறுமாறு அதிகாரிகளால் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடல் மட்டத்திலிருந்து வெறும் 1.5 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ள பேங்கொக் நகரில் வாழும் மக்கள், ஆண்டுதோறும் மழைக்காலத்தில் இவ்வாறான கடும் வெள்ள அச்சுறுத்தல்களைச் சந்தித்து வருகின்றனர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.