இலங்கைப் போக்குவரத்துச் சபை பேருந்துகளின் சேவை குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
100 கிலோமீற்றருக்கு மேற்பட்ட தூரங்களில் சேவையில் ஈடுபடும் இலங்கைப் போக்குவரத்துச் சபை பேருந்துகள், எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல் புதிய நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்தே தமது சேவைகளை ஆரம்பிக்க வேண்டும் என இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன பணிப்புரை விடுத்தார்.
யாழ்ப்பாணப் பேருந்து நிலையச் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான அவசர ஒருங்கிணைப்புக் கலந்துரையாடல் நேற்று (13.11.2026) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகில் அமைக்கப்பட்டு அண்மையில் மீளத் திறந்து வைக்கப்பட்ட புதிய நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் நெடுந்தூரப் பேருந்துகள் சேவைகளை முன்னெடுத்து வருகின்றபோதிலும், இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பேருந்துகள் அங்கிருந்து சேவைகளை ஆரம்பிக்காத நிலையை ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
பேருந்து சேவை
பேருந்து நிலையங்களின் செயற்பாடுகளும் பேருந்துச் சேவைகளும் பயணிகளின் நலனை மையப்படுத்தியே அமைய வேண்டும் என வலியுறுத்திய அவர், இவ்விடயம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பையும் குறிப்பிட்டார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தலைவர், சபையின் நடைமுறைகளின்படி 100 கிலோமீற்றருக்கு மேற்பட்ட தூரமே நெடுந்தூரப் பேருந்துச் சேவையாகக் கருதப்படுவதாகத் தெளிவுபடுத்தினார்.

புதிய பேருந்து நிலையம் இந்தத் தூர வரையறையின் அடிப்படையிலா அல்லது வெளிமாவட்டங்களுக்கான பேருந்துச் சேவைகளைக் கருத்திற்கொண்டா அமைக்கப்பட்டது என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, குறித்த பேருந்து நிலையம் வெளிமாவட்டங்களுக்கான சேவைகளை முன்னெடுக்கும் நோக்கில் அமைக்கப்பட்டமை தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது.
உரிய ஒழுங்குமுறை
இலங்கைப் போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்துகளின் சேவைகள் ஒரே நேரத்தில் புறப்படுவதால் ஏற்படும் நேர மோதல்கள் மற்றும் பயணிகளுக்கான சிரமங்களைத் தவிர்ப்பதற்காக நேர அட்டவணையை மறுசீரமைக்கத் தீர்மானிக்கப்பட்டது.

குளிரூட்டப்பட்ட பேருந்துகளும் இந்த இணைந்த நேர அட்டவணைக்குள் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
அலுவலர்களுக்கான சேவைப் பேருந்துகளையும் உரிய ஒழுங்குமுறைகளுக்கு அமைவாக இந்த விகிதாசாரக் கட்டமைப்புக்குள் உள்ளடக்குவது தொடர்பிலும் இணக்கம் காணப்பட்டது.
புடின் விடுத்த மிரட்டல்... ரகசிய ரஷ்யப் பகுதியைக் கண்காணிக்கும் பிரித்தானிய உளவு விமானங்கள் News Lankasri