ஹட்டன் நகரில் மீண்டும் தீவிரமான குப்பை பிரச்சினை: துர்நாற்றம் - வளிமாசு குறித்து மக்கள் கடும் அதிருப்தி
ஹட்டன் நகரில், நுவரெலியா மாவட்டத்தின் நுழைவாயிலாகக் கருதப்படும் இந்தப் பகுதியில் நீண்டகாலமாக நிலவி வந்த குப்பை அகற்றல் பிரச்சினை மீண்டும் தீவிரமடைந்துள்ளதால், நகரம் முழுவதும் துர்நாற்றம் வீசும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக குப்பை கொட்டுவதற்கான நிரந்தர இடமின்றி, நகரம் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.
இதன் காரணமாக கடந்தகால நிர்வாகங்களும் அரசியல் தலைமைகளும் கடும் எதிர்ப்புகளுக்கு உள்ளாகினர். கடந்த ஆட்சிக்காலத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் 16,500 ரூபாய் செலவில் 22 குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட்டன.
ஆனால் அப்போது பதில் கடமையாற்றிய செயலாளர், குப்பை பிரச்சினை மோசமடைந்ததைக் காரணம் காட்டி, சீமெந்து கொண்டு கட்டப்பட்ட அந்த குப்பைத் தொட்டிகளை அகற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரமான குப்பை பிரச்சினை
இதன் விளைவாக, குறித்த இடங்களை தற்போது சில தனியார் தரப்புகள் கையகப்படுத்தியுள்ளதாகவும், அதற்கான எந்த நடவடிக்கையும் நகர சபையால் எடுக்கப்படவில்லை என்றும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது, குப்பைத் தொட்டிகள் இருந்த இடங்களில் கழிவுகளை பிரித்து போடுவதற்காக மூன்று பரல்கள் வைக்கப்பட்டுள்ளன.

எனினும், அவை நிரம்பி வழியும் நிலையிலும், குப்பைகள் அகற்றப்படாமல் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். மேலும், தெருக்களில் சுற்றித் திரியும் மிருகங்கள் குப்பைகளை கிளறி சிதறடிப்பதால் சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில், பிரதேச மக்கள் ஹட்டன் நகர சபை அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் மீது கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
புதிய அரசாங்கம் அமைவதற்கு முன்பே, குப்பை பிரச்சினை முக்கிய தேர்தல் வாக்குறுதியாக முன்வைக்கப்பட்டது.
மேலும், குப்பை அகற்றுவதற்கான பொருத்தமான நிலப்பரப்பை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருந்தது.
காற்று மாசடைவு
ஆனால், புதிய அரசாங்கம் அமைந்த பின்னர், முன்னாள் வாடிவீடு இருந்த காணியில் குப்பைகள் குவிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் நகர நுழைவாயிலிலேயே துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், அங்குள்ள குப்பைகளுக்கு தீ வைக்கப்பட்டதால் பல மாதங்களாக வளிமாசு அதிகரித்துள்ளதாகவும், இதுகுறித்து பொறுப்பான அதிகாரிகளும் சுகாதாரப் பிரிவினரும் மௌனம் காத்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அரசாங்கம் அமைந்து ஒரு வருடமும், நகர சபை பதவி ஏற்று ஒன்பது மாதங்களும் கடந்துள்ள நிலையில், இதுவரை இந்த குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படவில்லை என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்பு 300 வது Episode சிறப்பு நேரலை