சீனப்பிரஜை கடத்திப் படுகொலை: மாறுவேடமிட்டிருந்த முக்கிய சந்தேகநபர் கைது
கொழும்பு துறைமுக நகரத்தில் வைத்து சீனப் பிரஜை ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டின் பிரதான சந்தேகநபர் மாறுவேடமிட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீனப் பிரஜையை காரில் கடத்திச் சென்று படுகொலை செய்து, அவரது உடலைக் கற்களால் மூடிவிட்டுத் தப்பிச் சென்ற சம்பவத்தின் பிரதான சந்தேகநபரே இவ்வாறு செயற்கை முடி (விக்கு) அணிந்து மாறுவேடத்தில் இருந்தபோதே 43 நாட்களுக்குப் பின்னர் நேற்றைய தினம் (04.09.2026) துறைமுக நகரத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் அணிந்திருந்த செயற்கை முடியும் பொலிஸ் பாரத்திற்கு எடுக்கப்பட்டுள்ளது. இக்குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நான்கு சீன தேசியவாதிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
எஹெலியகொட பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட கரதன பொலிஸ் சோதனைச் சாவடி அதிகாரிகள் குழுவொன்று, சோதனைச் சாவடியிலிருந்து கெட்டஹெத்த வீதியில் அமைந்துள்ள ரம்புட்டான் தோட்டம் ஒன்றிலுள்ள இடிந்த வீடொன்றில் இருந்து கடந்த ஜூலை 23 ஆம் திகதி நபரொருவரின் சடலத்தைக் கண்டெடுத்தது.
விசாரணை
அச்சடலம் கபொக் கற்களால் மூடப்பட்டிருந்த நிலையில், சந்தேகத்திற்குரிய சொகுசு கார் ஒன்றும் அன்றைய தினமே நுகதண்ட கோவில் அருகிலுள்ள வீதியிலிருந்து மீட்கப்பட்டது.
மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் இதுவொரு படுகொலை என்பதும், உயிரிழந்தவர் சீன பிரஜை என்பதும் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளில், அவர் கொழும்பு துறைமுக நகரத்திலிருந்து கடத்தி வரப்பட்ட சீன தேசியவாதி என்பது உறுதிசெய்யப்பட்டது.
கடந்த ஜூலை 23 ஆம் திகதி இக்குற்றம் இடம்பெற்ற காலப்பகுதியிலேயே, சந்தேகத்திற்குரிய இரு சீன பிரஜைகள் வெளிநாடு தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்றிருந்தபோது கைது செய்யப்பட்டனர்.
ஏனைய இரு சீனப் பிரஜைகளும் சம்பவத்தின் பின்னர் கொழும்புப் பகுதியை விட்டுத் தப்பி, சீகிரியா பகுதியிலுள்ள விடுதியொன்றில் ஒளிந்திருந்த நிலையில் கடந்த மாதம் 30 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டுள்ள 54 வயதான முக்கிய சந்தேகநபரான சீனப் பிரஜையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தடுப்புக் காவல் உத்தரவைப் பெற பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20