செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் தொடரும் சர்ச்சை: அரசாங்க தரப்பிலிருந்து வெளியான அறிவிப்பு
செம்மணி மனித புதைக்குழி அகழ்வாராய்ச்சி தொடர்பில் பேராசிரியர் ராஜ் சோமதேவ முன்வைத்த அறிக்கை இறுதியானதல்ல எனவும், அது வெறும் அகழ்வாராய்ச்சி அறிக்கை மாத்திரமே என நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் ராஜ் சோமதேவவின் அறிக்கை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அடுத்தகட்ட நடவடிக்கை
பேராசிரியர் ராஜ் சோமதேவ தடயவியல் மருத்துவ நிபுணர் அல்ல என்றும், அவர் சட்ட மருத்துவ அறிக்கை எதையும் வெளியிடவில்லை என்றும் நீதி அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

சட்ட மற்றும் தடயவியல் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், காணாமல் போனோர் அலுவலகம் (OMP) 12(d) பிரிவின் கீழ் கண்காணிப்பாளராகச் செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செம்மணி மனித புதைக்குழி அகழ்வின் போது இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகள் தொடர்பில் மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்வதன் ஊடாகவே உண்மையைக் கண்டறிய முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
செம்மணி புதைகுழியில் பல கட்டங்களாக நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளின் மூலம் சுமார் 574 நபர்களின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
இதற்கமைய, மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு சர்வதேச மட்டத்தில் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் ரீதியான ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நீதியமைச்சர் சபையில் சுட்டிக்காட்டிள்ளார்.
சர்வதேச தொழில்நுட்ப மற்றும் தடயவியல் உதவி
நீதிமன்றத்தால் அடையாளம் காணப்பட்ட தேவைகளை பொறுத்து, குறிப்பாக டி.என்.ஏ பகுப்பாய்வு, மனித எச்சங்களை அடையாளம் காணுதல் மற்றும் மேலதிக தடயவியல் விசாரணைகளுக்காக, சர்வதேச தொழில்நுட்ப மற்றும் தடயவியல் உதவியைப் பெற அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, செம்மணி மனித புதைக்குழி விவகாரத்தில் ஒரு தரப்பினருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாகவும், இந்த விவகாரத்தில் நிச்சயம் உண்மை கண்டறியப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.
எனவே செம்மணி விசாரணைகளை அரசியல்மயமாக்க வேண்டாம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உண்மையை நிலைநாட்டவும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நீதியை வழங்கவும், அறிவியல் மற்றும் சான்றுகள் அடிப்படையிலான செயல்முறையை உறுதி செய்வதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாகவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.