தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவின் மன நிலை குறித்து வெளியான தகவல்
நாமல் ராஜபக்ச தற்போது, மனதளவில் தளர்ந்து விடாமல் மிகவும் உறுதியுடன் உள்ளார் என்று பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்டுள்ள 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சிறந்ததா, மேசமானதா என்பதைத் தீர்மானிப்பதற்கு ஒரு முறையான அளவுகோல் அவசியம்.
ஜனநாயக வழியில் தீர்வு
எந்தவொரு திட்டமும் அல்லது முன்மொழிவும் வெறுமனே அறிவிக்கப்பட்டிருப்பதால் மட்டும் அது சிறந்ததாகிவிடாது. எனவே, 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து கருத்து தெரிவிப்பதற்கு முன்னர், 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் என்ன நடந்தது என்பதைப் பாருங்கள்.
ஒரு அமைச்சுக்கு 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டதாக வைத்துக்கொள்வோம். அந்தத் தொகை செலவிடப்பட்டதா, அதனைப் பயன்படுத்தி என்ன பணிகள் முன்னெடுக்கப்பட்டன? என்பதை அறிந்து கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு ஒதுக்கீட்டையும் தெளிவாக ஆராய்வதன் மூலமே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத் திட்டங்கள் சிறந்தவையா அல்லது மோசமானவையா என்பதை ஒட்டுமொத்தமாகப் புரிந்து கொள்ள முடியும்.
இதேவேளை, தற்போதைய நிலையில் பல சவால்களை எதிர்கொள்வதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மிகவும் உறுதியுடன் செயற்பட்டு வருகின்றார்.
அவர் மனதளவில் தளர்ந்துவிடாமல், தமது ஆதரவாளர்களும் மனதளவில் தளர்வடைவதற்கு இடமளிக்காமல் இந்தச் சவாலை உறுதியுடன் எதிர்கொண்டு வருகின்றார்.
மேலும், தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஜனநாயக வழியில் தீர்வு காண்பதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.