நீதி வழங்கலில் மெத்தனம் காட்டும் இலங்கை: சர்வதேச மன்னிப்புசபையின் செயலாளர் குற்றச்சாட்டு
இலங்கை அரசாங்கமானது நீதி வழங்குவதில் மெத்தனப்போக்கை காட்டுவதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் அக்னெஸ் கலமர்ட் (Agnès Callamard) குற்றம் சுமத்தியுள்ளார்.
அவர் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் ஐந்தாவது நாளான நேற்று (20.05.2024) அதிகாரிகளுடன் உரையாடுகையிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
"இலங்கைச் சமூகத்தை உடைத்து துருவப்படுத்திய யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களின் பின்னர், இலங்கை எதிர்கொள்ளும் பல சவால்கள் பற்றிய நுண்ணறிவுகளை இந்த விஜயம் எனக்கு வழங்கியுள்ளது.
இலங்கைக்கான விஜயம்
மேலும், நான் சந்தித்த அனைவரும், அவர்களின் வலி மற்றும் துக்கங்களை விபரித்து, அவர்களின் கருத்துக்களையும் கவலைகளையும் பகிர்ந்து கொண்டு, நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்திற்கான நம்பிக்கைகள், அச்சங்கள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இந்த நிலையில், சர்வதேச மன்னிப்பு சபை, தண்டனையிலிருந்து விடுபடுவதை தடுத்தல், கடந்தகால மற்றும் நிகழ்காலத்தின் மீறல்கள், குறைகளை நிவர்த்தி செய்வதல், பாகுபாடு மற்றும் அடிப்படை சுதந்திரங்களின் அடக்குமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தல், அனைத்து உண்மையான முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்புகளை மேற்கொள்ள தயாராகவுள்ளது.
அதேவேளை, இலங்கையில் இணைய பாதுகாப்புச் சட்டம் மற்றும் முன்மொழியப்பட்ட அரச சார்பற்ற அமைப்புச் சட்டம் போன்ற பல புதிய சட்டங்கள், தற்போது இலங்கையின் துடிப்பான சிவில் சமூகம் எதிர்கொள்ளும் ஆபத்துக்களுக்கு சான்றுகளாக உள்ளன.
கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான கூட்டம் ஆகியவற்றுக்கு எதிரான போக்கு, ஐ.சி.சி.பி.ஆர் சட்ட விதிகளைப் பயன்படுத்துதல் மற்றும் தன்னிச்சையான கைதுகளுக்கு முடிவுகட்ட வேண்டும்.
தமிழீழ மக்கள்
மேலும், பல்லாயிரக்கணக்கான மக்களை காயப்படுத்தி இறப்புக்களை ஏற்படுத்திய, இடம்பெயர்ந்த, அல்லது பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட மூன்று தசாப்த கால உள்நாட்டு ஆயுதப் போர் முடிவடைந்து 15 வருடங்களைக் குறிக்கும் இந்த ஆண்டு, இலங்கைக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க ஆண்டாகும்.
ஆனால், இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களையும் மக்களையும், கருத்திற்கொள்வதில் அடுத்தடுத்த அரசாங்கங்கள் மட்டுமல்ல. தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் முதல் எதிர்கட்சித் தலைவர்கள், மத ஸ்தாபனங்கள் மற்றும் தேசிய ஊடகங்கள் வரை தலைமைப் பதவிகளில் இருப்பவர்கள் தவறிவிட்டனர்.
அத்துடன் தண்டனையின்மைக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொள்ளவும் அவர்கள் தவறிவிட்டனர்.
எதிர்வரும், மாதங்களில் நடைபெறவுள்ள தேர்தல்கள் இலங்கையின் எதிர்காலம் மற்றும் மனித உரிமைகள் பரிசீலனைகள் ஆகியவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
எனவே, நாட்டின் அரசியல் தலைமையானது நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
அரச, நீதி துறை
அது பிளவுகளை நிவர்த்தி செய்யும், இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை ஊக்குவிக்கும் மற்றும் அர்த்தமுள்ள சிகிச்சைக்கான வழிகளை வழங்க வேண்டும். கடந்த கால தவறுகளை நிவர்த்தி செய்வது அவசியம்.
இந்நிலையில், ஒரு புதிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதை அரசாங்கம் பரிசீலிக்கும் வேளையில், நிவர்த்திக்கான சூழலை உருவாக்க நனவான முயற்சியை மேற்கொள்ளவேண்டும்.
இலங்கையை பொறுத்தவரையில், வெளித்தோற்றத்தில் அரசியல் விருப்பமின்மை, நீதி வழங்குவதில் மனநிறைவின்மை நிலவுகிறது.
அது மாத்திரமன்றி, நல்லிணக்கத்தைத் தடுக்கிறது, குறைகளை ஊட்டுகிறது மற்றும் உறுதியற்ற தன்மையை ஊக்குவிக்கின்ற நிலையில் இந்த மெத்தனப் போக்கிற்கு இடமளிக்கக் கூடாது.
அத்துடன், யுத்தம் மற்றும் நடந்து கொண்டிருக்கும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உண்மை, நீதியைப் பாதுகாப்பதற்கும், சுதந்திரமான மற்றும் நியாயமான இலங்கைக்கான அடித்தளத்தை அமைப்பதற்கும் தேசிய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுமாறு சர்வதேச சமூகத்திடம் கேட்டுக் கொள்கின்றேன்” என வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |