ஜனாதிபதி மாளிகையில் பதுங்கு குழிக்குள் இருக்கும் இரகசிய அறை
கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை முற்றிலுமாக போராட்டகாரர்களில் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், இன்றிரவு பதுங்கு குழி ஒன்று இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த பதுங்கு குழிக்குள் இரகசிய அறை ஒன்று இருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது. நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது.
கடந்த மூன்று மாத காலத்திற்கு மேலாக போராட்டங்கள் இடம்பெற்று வந்த நிலையில் மே மாதம் 9ம் திகதி பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகினார்.
ஜனாதிபதி மாளிகையில் பதுங்கு குழி
இந்நிலையில், ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் உடன் பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ மாளிகை முற்றிலும் போராட்டகாரர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டிருந்தது. தற்போது வரையிலும் பொதுமக்கள் அங்கு குவிந்துள்ளனர்.
இந்நிலையிலேயே, ஜனாதிபதி மாளிகையில் பதுங்கு குழி ஒன்று இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டிருந்த. ஜனாதிபதி மாளிகையில் பிரத்தியேக கட்டிடம் ஒன்றில் இந்த பதுங்கு குழி இருக்கின்றது. இந்த பதுங்கு குழியானது வெவ்வேறு அலுமாரி கதவுகள் ஊடாகவே உற்பிரவேசிக்க முடிகின்றது.
அத்துடன், இந்த பதுங்கு குழிக்குள் பிரமாண்ட Lift ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பதுங்கு குழியில் அடிப்பகுதியில் மிகவும் இரகசிய அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் வலுவான இரும்பு கதவுகளால் திறக்க முடியாத அளவிற்கு இந்த இரகசிய அறை அமைக்கப்பட்டுள்ளது.
இதுவரை திறக்கப்படாத இரும்பு கதவு
எவ்வாறாயினும், அந்த அறையின் கதவு இதுவரையில் திறக்க முடியவில்லை. ஏதேனும் முக்கிய அம்சங்கள் அல்லது விடயங்கள் அதில் இருக்கலாம் என மக்கள் மத்தியில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும், அந்த இரகசிய அறை மிகவும் குளிரூட்டப்பட்ட அறையாக அமைக்கப்பட்டுள்ளது. அறையின் இரும்பு கதவின் அடிப்பகுதியில் இருக்கும் சிறிய இடைவெளி ஊடாக வரும் குளிர் காற்றின் ஊடாக அதனை உணர முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.