இரண்டாவது நாளாக தொடர்ந்த யாழ்ப்பாண சாலை ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு: முடிவுக்கு வந்தது(Video)
புதிய இணைப்பு
இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாண சாலை பணியாளர்கள் மேற்கொண்ட பணிபகிஷ்கரிப்பானது தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
இந்த பணிபகிஷ்கரிப்பானது இன்று(25) மாலை 4 மணி முதல் கைவிடப்பட்டுள்ளதாகவே தொழிற்சங்கங்களினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையின் சாலை ஊழியர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த பணிபகிஷ்கரிப்பானது நேற்று(24) ஆரம்பிக்கப்பட்டு இரண்டாவது நாளாக இன்று(25) முன்னெடுக்கப்பட்டது.
இந்த முறைப்பாட்டை தொழிற்சங்கங்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபையின் கல்கமுவ சாலையை சேர்ந்த ஆறு பேர் பொலிஸாரால் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பகிஷ்கரிப்பை கைவிட இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலை ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றாக முடங்கியதோடு பொதுமக்கள் பலர் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக பேருந்து நுழைவாயிலில் போடப்பட்டிருந்த தடைகள் அகற்றப்பட்டுள்ளது.
அத்துடன் விரைவில் இலங்கை போக்குவரத்து சபையானது தமது சேவையை வழமைபோல் ஆரம்பிக்கும் என தெரிவித்துள்ளது.
மேலதிக செய்தி: தீபன்
இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாண சாலை பணியாளர்கள் இரண்டாவது நாளாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.
இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் இருவர் தாக்கப்பட்டமைக்கு எதிராகவே யாழ்ப்பாண சாலை ஊழியர்கள் நேற்று(24) பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.
இரண்டாவது நாளாக பணிபகிஷ்கரிப்பு
எனினும் தாக்குதலை நடத்திய ஊழியர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படாமையாலேயே இன்று(25) இரண்டாவது நாளாகவும் பணி பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட காரணமாக கூறப்படுகின்றது.
அதேவேளை எரிபொருள் பெறுவதிலும் சிக்கல்கள் காணப்படுவதன் காரணமாக யாழ்ப்பாண தனியார் பேருந்துகள் உள்ளூர் மற்றும் வெளியூரில் சேவையில் ஈடுபடவில்லை.
யாழ்ப்பாண பிராந்திய கூட்டிணைக்கப்பட்ட பேருந்து கம்பனிகளின் இணைய அலுவலகத்தில் எரிபொருளை பெறுவதற்கான முயற்சியும் தோல்விலேயே முடிந்துள்ளது.
எரிபொருள் இல்லாததால் முழு தனியார் போக்குவரத்தும் இன்று(25) ஸ்தம்பிதமடைந்துள்ளது. தூர பேருந்து சேவையும் இடம்பெறவில்லை.
பொதுமக்கள் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய கூட்டிணைக்கப்பட்ட பேருந்து கம்பனிகளின் இணையத்தின் தலைவர் பொ.கெங்காதரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "இலங்கை போக்குவரத்து சபை சாலைகளில் தனியார் பேருந்துகள் எரிபொருள் பெறும்போது பாரிய பிரச்சினைகள் ஏற்படுகின்றன. தனியார் பேருந்துகளுக்கு நேற்றும் எரிபொருள் வழங்கப்படவில்லை.
இன்று சேவையில் ஈடுபட எரிபொருள் இல்லாததால் முழு தனியார் போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளது. தூர பேருந்து சேவையும் இடம்பெறாது.
பொதுமக்கள் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் எரிபொருளை பெற்றுதர முயற்சித்தபோதும் பலனளிக்கவில்லை.
எரிபொருள் கிடைத்தால் தொடர்ந்தும் பயணிகள் சேவையில் ஈடுபடுவோம்”என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று வடக்கு மாகாணத்துக்குட்பட்ட தூர பேருந்துகளும் சேவையில் ஈடுபடவில்லை என்று யாழ்ப்பாணம் மாவட்ட தனியார் தூர பேருந்து சங்க தலைவர் விநாயகமூர்த்தி சஜிந்தன் தெரிவித்துள்ளார்.
சேவையில் ஈடுபட எரிபொருள் இல்லாததால் முழு தனியார் போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்ததோடு, தூர பேருந்து சேவையும் இடம்பெறவில்லை.
இலங்கை போக்குவரத்து சபை பேருந்துக்கள் மற்றும் தனியார் பேருந்துகள் சேவை புறக்கணிப்பில் ஈடுபட்டமையால் , பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
நீண்டகாலத்திற்கு பின்னர் இன்றைய தினம் பாடசாலைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் மாணவர்கள் ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு செல்ல சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
மேலதிக செய்தி: தீபன்
தொடர்புடைய செய்திகள்:
யாழ்ப்பாணத்தில் இ.போ.ச ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு(Photos) |