எந்த நேரத்திலும் உடைந்து விழும் வீட்டுச் சுவர்கள் - மீளக்குடியமர விரட்டும் கிராம சேவகர்
மண்சரிவு அபாய பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களை மீண்டும் குறித்த பகுதிக்குச் சென்று குடியேறுமாறு கிராம உத்தியோகத்தர் கட்டாயப்படுத்துவதாக பொகவந்தலாவ - கியூ தோட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
பொகவந்தலாவ நகரில் இருந்து பல கிலோ மீட்டர் உயரத்தில் கியூ தோட்டம் காணப்படுகின்றது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக, குறித்த பகுதியில் இருக்கக் கூடிய வீடுகளில் வெடிப்பு ஏற்பட்டதோடு வீடுகள் தாழிறங்கும் நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
சொந்த வீடுகளுக்கு திரும்புமாறு
மேலும், மண்சரிவு அபாயம் காரணமாக கியூ தோட்டம் - மேற்பிரிவில் வசிக்கும் சில குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு அண்மையில் இருக்கும் சென் ஜோன் டிலரி பாடசாலையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், செந்தில் தொண்டமான் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் மற்றும் நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்டோர் வருகை தந்து குறித்த மக்களைப் பார்வையிட்டதோடு, நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்து சென்றிருந்தனர்.
எனினும், குறித்த மக்களுக்கான தங்குமிடங்கள் தொடர்பில் ஆக்க பூர்வமான தீர்வுகள் எவையும் வழங்கப்படவில்லை.
அதேசமயம், இடர்காலத்தில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் தற்போது மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ள குறித்த மக்களை வெளியேற்றுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், தங்களுடைய சொந்த வீடுகளுக்கு திரும்புமாறும், அங்கு தங்குவதில் பிரச்சினைகள் இல்லையென்றும் குறித்த தோட்டத்திற்குரிய கிராம அலுவலர் அறிவுறுத்தியிருக்கின்றார்.
பாடசாலை நடவடிக்கைகளை ஆரம்பிக்க
எனினும், வீடு முழுவதும் வெடிப்புக்கள் ஏற்பட்டு, மண்சரிவு அபாயத்தில் இருக்கும் குறித்த வீட்டில் எம்மால் எப்படி தங்க முடியும் எனவும், ஆய்வுகள் சரியான விதத்தில் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தோட்ட மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
எவ்வாறாயினும் பாடசாலை நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்பதன் காரணமாக குறித்த மக்கள் மீண்டும் அபாயகரமான பகுதிக்கு சென்று தங்குவதற்கு கட்டாயப்படுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பாடசாலை நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படுவது மிக மிக அவசியமானதே, அதே சமயம் நிர்க்கதியான நிலையில் இருக்கும் மக்களுக்கு பாதுகாப்பான மற்றுமொரு தங்குமிடத்தையும் வழங்கி வைக்க வேண்டியது அத்தியாவசியமானது.
கடந்த கால இடர்களில் ஏற்கனவு 600இற்கும் மேற்பட்ட மக்களை காவு கொடுத்திருக்கும் நிலையில், தெரிந்தே மக்களை ஆபத்தில் சிக்க வைப்பது என்பது எத்தனை நியாயமானது என்ற கேள்வியை மக்கள் எழுப்புகின்றனர்.
தங்குமிடம் இல்லாத நிலையில் இருக்கும் மக்களுக்கு அரசி, பருப்பு என்று நிவாரணப் பொருட்களை மாத்திரம் வழங்கிச் செல்வது மண்சரிவு அபாயத்திற்கு காத்திரமான தீர்வாகுமா என மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
அதேசமயம், குறித்த விடயம் தொடர்பில் துறைக்குப் பொறுப்பான அமைச்சர்கள், அதிகாரிகளின் நியாயமான தலையீட்டை கோருவதோடு தமக்கான தீர்வு குறித்து ஜனாதிபதியிடமும் இந்த மக்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |