மட்டக்களப்பில் தேடப்பட்டு வந்த பிள்ளையானின் சகா சிஐடியினரால் கைது
சி ஐ டி யினரால் தேடப்பட்டு வந்த பிள்ளையானின் சகாவான அஜித் என்பவரை மட்டக்களப்பு கொண்டையங்கேணியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இன்று (17.12.2025) கொழும்பில் இருந்து சென்ற குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் (சிஜடி) குறித்த நபரை கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிள்ளையானிடம் மேற்கொண்டுவரும் விசாரணை
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 டிசம்பர் 15ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் சிஐடியினரால் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி கைது செய்யப்பட்டார்

இவ்வாறு கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வைக்கப்பட்டிருக்கும் பிள்ளையானிடம் மேற்கொண்டுவரும் விசாரணையின் அடிப்படையில், அந்த கட்சியை சார்ந்தவர்கள் மற்றும் பிள்ளையானின் சகாக்கள் பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணை இடம்பெற்று வருகின்றது.
இதனடிப்படையில் பிள்ளையான் சகாவான அஜித் என அழைக்கப்படும் கிருஷ்ணபிள்ளை சுமன் என்பவரை சிஜடி யினர் தேடி வந்துள்ள நிலையில் அவர் குவைத் நாட்டிற்கு தப்பி ஓடி தலைமறைவாகி இருந்து, கடந்த 4 நாட்களுக்கு முன்னர் மீண்டும் நாட்டிற்கு திரும்பி வந்துள்ளார்.
இந்நிலையில், கொழும்பில் இருந்து சென்ற சிஐடியினர் அவரை கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |