ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு எதிராக இரண்டாவது முறைப்பாடு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு எதிராக இரண்டாவது முறைப்பாட்டை, இலங்கையின் தேசிய தேர்தல் ஆணையகம் பெற்றுள்ளது. தேர்தல் கண்காணிப்பு அமைப்பான தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் தனது முதல் முறைப்பாட்டை கடந்த வெள்ளிக்கிழமை சமர்ப்பித்தது.
2025 மார்ச் 29ஆம் திகதி திஸ்ஸமஹாராமவிலும், மார்ச் 31ஆம் திகதி புத்தளத்திலும் ஜனாதிபதி திசாநாயக்க ஆற்றிய உரைகளை சிஎம்ஈவி என்ற தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் மேற்கோள் காட்டியுள்ளது.
இதனையடுத்து ஏப்ரல் 10 ஆம் திகதி கண்டியிலும், ஏப்ரல் 11ஆம் திகதி அக்கரைப்பற்று மற்றும் சம்மாந்துறையிலும், ஏப்ரல் 12 ஆம் திகதி கந்தளாய் மற்றும் மட்டக்களப்பிலும், ஏப்ரல் 17 ஆம் திகதி மன்னாரில் ஆற்றிய உரைகளும், இந்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இந்த அனைத்து தேர்தல் பேரணிகளிலும், தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளூர் சபைகள் இல்லாவிட்டால், அத்தகைய சபைகளின் நிதிக்கோரிக்கைகள் தாமதமாகும் அல்லது நிறைவேற்றப்படாமல் போகும் என்று ஜனாதிபதி திசாநாயக்க கூறியிருந்தார்.
கட்டளைச் சட்டம்
இந்த உரைகள் அனைத்திலும், அரசாங்கம் மற்ற கட்சிகளின் பிரதிநிதிகளை நம்பாததால் நிதியுதவியை உறுதி செய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையில், உள்ளூர் அதிகாரசபை தேர்தல் கட்டளைச் சட்டத்தின்படி, கடுமையான மற்றும் தெளிவான மீறலாக இது கருதப்படுவதாக, தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையத்தின் தலைமை நடவடிக்கை அதிகாரி அர்ஜூன பராக்கிரம கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்கள் காரணமாக,தாம் இரண்டாவது முறையாகவும் முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளதாக பராக்கிரம குறி;ப்பிட்டுள்ளார்.
இந்த மீறல்கள் சுதந்திரமான மற்றும் நியாயமான உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதை எதிர்மறையாக பாதிக்கும். எனவே, தேர்தல் பிரசாரக் காலத்தில் இதுபோன்ற மீறல்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க தேர்தல் ஆணையகம் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உறுதி செய்யும் என்று தாம் நம்புவதாக அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில் இந்த முறைப்பாடுகள் தொடர்பில் ஏப்ரல் 21ஆம் திகதியன்று நடைபெறும் தமது ஆணையகத்தின் பொதுக்கூட்டத்தில் உரிய தீர்மானம் எடுக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும் வேட்புமனுக்கள் தொடர்பான சட்டசிக்கல்கள் காரணமாக, ஜனாதிபதிக்கு எதிரான இந்த முறைப்பாடுகளை, ஜனாதிபதிக்கு செயலகத்துக்கு அனுப்புவதிலும், குறிப்பிட்ட முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதிலும் தாமதம் ஏற்பட்டிருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |