சிறுவர்களுக்கு சமூக ஊடகத் தடைவிதித்துள்ள மற்றுமொரு வெளிநாடு! புதிய சட்ட விதிமுறைகள் விரைவில்
துருக்கி நாட்டில் சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய சட்டதிட்டங்கள் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.
இது குறித்த விவரங்களை துருக்கியின் குடும்பம் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் மஹினூர் ஒஸ்டெமிர் கோக்டாஸ் (Mahinur Ozdemir Goktas) வெளியிட்டுள்ளார்.
அதீதப் பயன்பாடு
சமூக ஊடகங்களின் அதீதப் பயன்பாட்டால் சிறுவர்களின் கவனம் செலுத்தும் திறன் (Attention Span) பெருமளவு குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில் குழந்தைகளின் கவனத்திறன் குறைந்தது 30 சதவீதம் சரிந்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், தற்போது ஒருவரால் ஒரு விடயத்தில் வெறும் 8 வினாடிகள் மட்டுமே கவனம் செலுத்த முடிவதாகத் தெரிவித்துள்ளார்.
இது குழந்தைகளின் கல்வி, சமூக உறவுகள் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் வகுப்பறைகளில் ஆசிரியர்கள் மாணவர்களைக் கையாள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விதிமுறைகள்
புதிய சட்டத்தின் முக்கிய அம்சங்களாக 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகக் கணக்குகளை உருவாக்கவோ அல்லது பயன்படுத்தவோ தடை விதிக்கப்படும்.
சமூக ஊடக நிறுவனங்கள் தங்களது பயனர்களின் வயதை உறுதி செய்ய முறையான அடையாளச் சரிபார்ப்பு முறைகளை (Identity Verification) நடைமுறைப்படுத்த வேண்டும்.

சிறுவர்களின் வயதுக்கு ஏற்றதாக இல்லாத மற்றும் அவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் உள்ளடக்கங்களை அவர்கள் அணுகாதவாறு நிறுவனங்கள் தடுக்க வேண்டும்.
இந்த விதிமுறைகள் விரைவில் இறுதி செய்யப்பட்டு நாடாளுமன்றக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
உலக நாடுகள் பலவும் தங்களது இளைஞர்களைப் பாதுகாக்க இத்தகைய சட்டங்களைக் கொண்டு வருவதாகவும், இதற்குப் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் கோக்டாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.