ஈரான் – அமெரிக்க அணுசக்தி பேச்சுவார்த்தைகள்! நெதன்யாகுவின் கடும் நிபந்தனைகள்
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்படவுள்ள எந்தவொரு ஒப்பந்தமும் ஈரானின் அணுசக்தி உட்கட்டமைப்புகளை முழுமையாக அகற்றுவதை உறுதிசெய்ய வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.
ஜெருசலேமில் நடைபெற்ற முக்கிய அமெரிக்க யூத அமைப்புகளின் மாநாட்டில் உரையாற்றிய அவர்,
ஏவுகணைத் திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி
கடந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்தபோது இந்த நிபந்தனைகளைத் தெளிவாக முன்வைத்ததாகத் தெரிவித்தார்.

ஈரானிடமுள்ள செறிவூட்டப்பட்ட அணுசக்தி பொருட்கள் அனைத்தும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும், அணுசக்தி செறிவூட்டல் திறனை முற்றாக முடக்க வேண்டும் மற்றும் ஈரானின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே இஸ்ரேலின் முக்கிய கோரிக்கைகளாகும்.
ஈரானின் வாக்குறுதிகளை மட்டும் நம்பாமல், எவ்வித முன்னறிவிப்புமின்றி எந்நேரமும் மேற்கொள்ளக்கூடிய சர்வதேச ஆய்வுகள் (Effective Inspections) அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பேச்சுவார்த்தை
கடந்த ஜூன் மாதம் (2025) இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய 12 நாள் வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு, இந்தப் பேச்சுவார்த்தைகள் புதிய பரிமாணத்தைப் பெற்றுள்ளன.

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் 80 சதவீதத்துக்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ள சீனாவிற்கு விற்கப்படும் எண்ணெயைத் தடுப்பதன் மூலம், ஈரான் மீதான பொருளாதார நெருக்கடியை அதிகரிக்க ட்ரம்பும் நெதன்யாகுவும் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதைத் தடுக்க வேண்டும் என்பதில் இரு தலைவர்களும் உடன்பட்டாலும், பேச்சுவார்த்தை மூலம் இதனைச் சாதிக்க முடியும் என ட்ரம்ப் நம்புகிறார்.
ஆனால், ஈரான் எப்போதும் ஏமாற்றும் தன்மையுடையது என்பதால் ஒப்பந்தங்கள் மூலம் எதனையும் சாதிக்க முடியாது என நெதன்யாகு தனது சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.