அனோஜனை விடுதலை செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் மெழுகுவர்த்திப் போராட்டம்
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுதலை செய்யக் கோரி திருகோணமலை மாவட்ட இளைஞர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டமானது, நேற்று(20.09.2026) திருகோணமலை - கடற்கரை பகுதியில் உள்ள காந்தி உருவச்சிலைக்கு பின்னால் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையில் இடம்பெற்ற இந்த கவனயீர்ப்பு நிகழ்வில் இளைஞர்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தியவாறும் இரு நிமிட மௌன அஞ்சலியுன் சிவராசா அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்கி, அவரை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இலங்கை அரசாங்கம் குறித்த விடயத்தில் தலையிட்டு, சவூதி அரேபிய அரசாங்கத்துடன் உரிய ராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த கவனயீர்ப்பில் சிவராசா அனோஜனின் குடும்பத்தினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், அவரின் விடுதலைக்காக பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இளைஞர்கள் பங்கேற்றனர்.

மேலதிக தகவல் - ரொசான்
யாழ்ப்பாணம்
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனை விடுதலை செய்யக் கோரி, நாளை (21) மாலை 5 மணிக்கு யாழ்ப்பாணத்தில் மெழுகுவர்த்திப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொது அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெழுகுவர்த்திப் போராட்டம்
சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை குறைத்து, அவரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தும் வகையில் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இந்த மெழுகுவர்த்திப் போராட்டத்தில் கலந்துகொண்டு அனோஜனுக்கான ஆதரவை வெளிப்படுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
