மீண்டும் ஊழல்வாதிகளிடம் ஆட்சி செல்லக்கூடாது..! சரத் பொன்சேகா எச்சரிக்கை
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசைப் பாதுகாக்க வேண்டும் என்றும், ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவது வரவேற்கத்தக்கது என்றும் முன்னாள் இராணுவத் தளபதியும் முன்னாள் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
தலைமறைவாகும் அரசியல்வாதிகள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தலைமறைவாக இருந்த ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் மீண்டும் மக்கள் மத்தியில் வந்து தலைதூக்க முற்படுகின்றனர். அரச வளங்களைச் சுரண்டிய இந்த அரசியல்வாதிகளுக்குச் சில அரச ஊழியர்களும் ஒத்துழைப்பு வழங்கினர். இதனால் இறுதியில் நாடு நாசமடைந்தது. வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டதுடன் மக்களும் துன்பப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.
தேசிய மக்கள் சக்தி அரசு ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிரான சக்தியாக உள்ளது. நாட்டை நாசமாக்கிய ஊழல்வாதிகள் குடும்பத்துடன் சிறைச்சாலைக்குச் செல்கின்றனர். இது கட்டாயம் நடைபெற வேண்டிய விடயம்.
இந்த அரசு ஆட்சிக்கு வந்திருக்காவிட்டால் ஊழல்வாதிகள் சிறைக்குச் சென்றிருக்க மாட்டார்கள். கடந்த காலங்களில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும் ஊழல்வாதிகள் பாதுகாக்கப்பட்டனர். தற்போது அந்த நிலைமை மாறியுள்ளது.
எனவே, இந்த அரசு ஐந்து ஆண்டுகள் ஆட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எனது முழுமையான ஒத்துழைப்பும் வழங்கப்படும்.
ஊழல்வாதிகளின் கைகளுக்கு ஆட்சி மீண்டும் செல்லக் கூடாது. இந்த அரசு தேவையில்லை என்றால், இதைவிடச் சிறப்பாகச் செயல்படக்கூடிய ஊழல் அற்ற தரப்பினரே ஆட்சிக்கு வர வேண்டும் என்றார்.