முல்லைத்தீவிலுள்ள சனசமூக நிலையங்களின் நிலை: அதிருப்தி வெளியிட்டுள்ள பொதுமக்கள்
முல்லைத்தீவில் (Mullaitivu) உள்ள சனசமூக நிலையங்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் இருந்த போதும் அவை சிறப்பான இயங்குநிலையில் இல்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
வட்டுவாகல் உதயசூரியன் சனசமூக நிலையத்தின் செயற்பாடற்ற போக்கினை எடுத்துக்காட்டாக முன்வைத்து முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் நிர்வாக எல்லைக்குள் வரும் சனசமூக நிலையங்களின் இயங்கு நிலைகள் பற்றி அப்பகுதி மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
அதேவேளை, சனசமூக நிலையங்கள் சிறப்பாக இயங்கி வருமானால் அவை சார்ந்த கிராமத்தவர்களின் திறன்கள் விருத்தியாக்கப்படுவதோடு அவர்கள் எதிர்கொள்ளும் பல சவால்களையும் இலகுவாக எதிர்கொள்ளும் சூழல் தோன்றும் என்பது சமூக விடய ஆய்வாளரின் கருத்தாக இருப்பதும் நோக்கத்தக்கது.
உதய சூரியன் சனசமூக நிலையம்
முல்லைத்தீவு வட்டுவாகலில் உள்ள உதயசூரியன் சனசமூக நிலையம் பயன்பாடற்ற நிலையில் பல நாட்களாக தொடர்ந்து பூட்டப்பட்டே இருப்பதாக அப்பகுதி மக்கள் பலரிடம் மேற்கொண்ட கேட்டல்களின் போது அறிந்து கொள்ள முடிந்தது.
மேலும், நேரடி அவதானிப்பின் மூலம் ஆரோக்கியமான பல கட்டுமானங்களை உதயசூரியன் சனசமூக நிலையம் கொண்டுள்ள போதும் அதன் பிரதான நோக்கம் சார்ந்து இயங்காது இருப்பதானது கவலைக்குரிய விடயமாகும்.
அது மாத்திரமன்றி, சுற்று மதில்கள் அமைக்கப்பட்டு பிரதான வாயிலுக்கு இரும்பாலான கதவு போடப்பட்டு சனசமூக நிலையத்தின் வளாகம் பாதுகாக்கப்படுகின்றது.
மேலும், வளாகத்தினுள் கிணறு ஒன்றும் கட்டிடம் ஒன்றும் சிறுவர்கள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்ட விளையாட்டு கட்டமைப்புக்களும் அங்குள்ளதனை அவதானிக்கலாம்.
எனினும், இவற்றில் எவையும் பயன்படுத்தப்படுவதாக தெரியவில்லை. பயன்படுத்தக் கூடியவற்றை பயன்படுத்தாது பூட்டி வைத்திருப்பதால் என்ன நன்மை ஏற்பட்டுவிடும் என பாடசாலை மாணவர் இருவர் குறிப்பிடுகின்றனர்.
கண்காணிக்கப்படாத நிலை
இது போலவே, தங்களின் பாடசாலை ஆய்வு கூடத்தில் அதிகளவான பரிசோதனைக்குரிய பொருட்கள் இருந்த போதும் அவற்றை பயன்படுத்தி பரிசோதனைகளை செய்து காட்டுவதில்லை. எங்களையும் செய்ய விடுவதில்லை என அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், வட்டுவாகல் உதயசூரியன் சனசமூக நிலையம் பதிவு இலக்கமாக MU.LG.RCC.0118 என்பதை கொண்டுள்ளது.
சனசமூக நிலையங்களை பதிவு செய்து கொள்ளும் அரச திணைக்களங்கள் அவற்றின் செயற்பாடுகளுக்கு நிதி ஒதுக்கீடுகளையும் செய்து வருகின்றன.
ஆயினும், அவை மீளவும் கண்காணிக்கப்படுவது இல்லை. அவ்வாறு கண்காணிக்கப்படுமாயின் சனசமூக நிலையங்களின் இயங்கு நிலை பற்றிய அவதானிப்புக்கள் பெறப்பட்டு இருக்கும். அவ்வாறானதொரு சூழலில் இயங்கி கொள்ளாதிருக்கும் சனசமூக நிலையங்கள் தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொள்ள முடிந்திருக்கும்.
சிறப்பான இயங்கு நிலையின் அவசியம் உணர்த்தப்பட்டு தொடர்ந்து இயங்குவதற்கான வழிகாட்டல்களை உரிய அரச திணைக்களங்களால் மேற்கொள்ள முடியும். அவ்வாறு மேற்கொள்ளப்படாமைக்கு உரிய அரசு அதிகாரிகள் பொறுப்பற்று அக்கறையின்மையோடு செயற்பட்டு வருவதே பிரதான காரணமாக அமைய முடியும் என ஒய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
பயன்பாடு
சிறுவர் விளையாட்டுத் திடலையும் தன்னகத்தே கொண்டுள்ள உதயசூரியன் சனசமூக நிலையம் சிறுவர்களை உள்ளீர்த்து அவர்களுக்கு விளையாட்டின் மூலம் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான வாய்ப்பை வழங்க முடியும். ஆனால், அவ்வாறான எத்தகைய செயற்பாடுகளும் நடைபெறுவதாக விளையாட்டு திடலின் அமைவிடத்தினை நோக்கும் போது அவதானங்களைப் பெற முடியவில்லை.
இந்நிலையில், கிராமங்களில் அமையுமா பெறும் ஒவ்வொரு சனசமூக நிலையங்களும் சனசமூக குழுவொன்று தெரிவு செய்யப்பட்டு அவற்றின் ஊடாகவே இவை முன்னெடுக்கப்படும். அவ்வாறான சமூக குழுக்கள் சிறப்பாக இயங்கினால் உதயசூரியன் சனசமூக நிலையம் போல் ஒரு அவலநிலை வராது என ஆர்வலர் ஒருவர் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது.
அதேவேளை, பிராந்திய பொது நூலகங்களுக்கு நிகராக செயற்படக் கூடியவை சனசமூக நிலையங்கள் ஆகும்.
நாளாந்த பத்திரிகைகளை பெற்று வாசிப்பதற்கு வைக்க வேண்டும். அவற்றை வாசிப்பதற்கு ஏற்ற சூழலையும் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
பத்திரிகை வாசிப்பின் மூலம் அன்றாட நடப்புக்களை அறிந்து கொள்வதோடு அப்பகுதி மக்களின் அறிவாற்றலும் புத்துயிர்க்கப்பட்டவாறே தொடர்ந்து இருக்கும்.
விரக்தியில் மக்கள்
சனசமூக நிலையங்களை வாசிகசாலைகள் எனவும் குறிப்பிடும் மக்களையும் யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் அவதானிக்க முடிகின்றது. சனசமூக நிலையங்களை வாசிக்கும் இடங்களாக அவர்கள் பயன்படுத்தியதன் விளைவினால் வாசிகசாலை என பெயர் ஏற்பட்டிருந்தது.
சனசமூக நிலையங்களை ஒரு சிறிய நூலகங்களாகவே வடிவமைத்துக் கொள்ளலாம் என்பதையும் இங்கே சுட்டிக்காட்டலாம்.
கிராமங்களில் உள்ளவர்களின் உதவி மற்றும் அரச நிதி ஒதுக்கீடு மூலம் தேவையான நூல்களையும் பத்திரிகைகளையும் கொள்வனவு செய்து வைக்க முடியும். நவீன இலத்திரனியல் கருவிகளைக் கூட உள்ளீர்த்து பயன்படுத்தும் சூழலுக்கும் மேம்பட்டுச் செல்லலாம். இதன் மூலம் தேடலுக்கும் வாசிப்பிற்கும் நல்ல தளத்தினை சனசமூக நிலையங்களால் உருவாக்கிக்கொள்ள முடியும்.
நூல் மற்றும் பத்திரிகை வாசிக்கும் பழக்கம் மக்களிடையே குறைந்து வருகின்றது என்பதை மாற்றியமைக்க அவற்றால் போராட முடியும் என சமூக விடய ஆய்வில் கற்றலை மேற்கொண்டு வரும் வரதன் என்பவருடனான உரையாடலின் போது சனசமூக நிலையங்கள் பற்றிய கருத்துக் கேட்டலிற்காக அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.
சனசமூக நிலையங்களின் ஊடாக கிராமம் ஒன்றின் இளையவர்களிடையே நல்ல பழக்கவழக்கங்களை உருவாக்கி விட முடிவதோடு அவர்களது விளையாட்டாற்றல்களையும் கல்வியோடு சேர்த்து அபிவிருத்தி அடையச் செய்து விடலாம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
செயற்பாட்டு நிலை
உதய சூரியன் சனசமூக நிலையம் போல் முல்லைத்தீவில் பல சனசமூக நிலையங்கள் பயன்பாடற்ற நிலையில் இருப்பதையும் சில இடங்களில் சனசமூக கட்டிடங்களே இல்லை எனவும் குறிப்பிடும் அவர் மற்றும் சில இடங்களில் சனசமூக நிலைய கட்டிடத்தில் கிராமத்தின் ஏனைய அலுவலகங்கள் இயங்கி வருவதையும் அவதானிக்கலாம் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
வட்டுவாகல் என்பது ஈழவிடுதலை போராட்டத்தின் பெரும் வலி சுமந்த இடங்களில் ஒன்றாகும். அந்த இடத்தின் கட்டுமானங்கள் மட்டுமல்லாது அப்பகுதியில் வாழும் மக்களின் கல்வி மற்றும் அறிவியலிலும் வளர்ச்சி பெற்ற நிலையை அடைந்து அவர்களும் வளமான ஒரு கல்விச் சமூகமாகவும் மாற்றம் பெற வேண்டும்.
சனசமூக நிலையத்தை செயற்பட வைத்து அவற்றை பயன்படுத்திக் கொள்ளும் பழக்கத்தினை அக்கிராம மக்கள் மற்றும் அக்கிராமத்தின் இளையவர்களிடத்தே ஒன்றிணைந்து உருவாக்கி விட்டால் இம் மாற்றம் ஆரோக்கியமான வளமான கல்விச் சமூகம் ஒன்று தோற்றம் பெறுவதற்கு உறுதுணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.
எனவே, சமூக ஆரோக்கியம் என்பது அந்த சமூகத்தின் எழுச்சிக்கும் நிலைத்திருத்தலுக்கும் பெருமளவில் பங்களிக்கும் என்பதும் இங்கே நோக்கத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |