பொதுவேட்பாளர் யோசனை தொடர்பில் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்குச் சம்பந்தன் கூறிய செய்தி
"உள்ளக சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் இணைந்த வடக்கு - கிழக்குக்கு சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வுடன் கூடிய தீர்வு என்பதுதான் சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசும் சேர்ந்து இணங்கிக் கொண்ட கடைசி விடயம். அதற்கு பாதிப்பு - குந்தகம் ஏற்படுத்தும் விதத்திலான முடிவு எதையும் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விஷப் பரீட்சை ஊடாக செய்வதற்குத் தமிழரசுக் கட்சியினர் இணங்கி விட - இறங்கி விடக் கூடாது." என அக்கட்சியின் பெருந்தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இன்று தம்மை தமது கொழும்பு இல்லத்தில் சந்தித்த கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மூலமே இந்தச் செய்தியை - தமது நிலைப்பாட்டை அவர் வெளிப்படுத்தியுள்ளார். இன்றைய சந்திப்பின்போது சம்பந்தன் தெரிவித்த விடயங்கள் வருமாறு:-
"ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் திட்டத்தின் ஆபத்துக் குறித்து தமிழரசுத் தலைவர் மாவை சேனாதிராஜாவுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி விளக்கியுள்ளேன்.
இது குறித்து மேலும் விவரமாகப் பேசுவதற்காக அவரைக் கொழும்புக்கு வரும்படி அழைத்திருந்தேன். கொழும்புக்கு வர இயலாமல் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதனால் அவருடன் மீண்டும் தொலைபேசியில் விவரமாகப் பேசவுள்ளேன். இந்த வாரத்தில் சிறீதரன் எம்.பியும் என்னை வந்து சந்தித்தார். அவருக்கும் எல்லாவற்றையும் விளக்கியுள்ளேன்.
தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது என்பது It's a silly idea (முட்டாள்தனமான யோசனை), Crazy idea too (பைத்தியக்காரத்தனமான திட்டமும் கூட). இது தமிழர்களின் எதிர்காலத்தை ஆபத்துக்குள் சிக்க வைக்கும் விஷப் பரீட்சை. தமிழர்களின் உரிமைக்கான போராட்டம் மிக நீண்டது. பல கட்டங்களைத் தாண்டி வந்துள்ளோம். ஒஸ்லோ அறிவிப்பு அதில் உச்சமானது.
உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் இணைந்த வடக்கு - கிழக்குக்கு சமஷ்டி முறையிலான தீர்வுக்கு அந்த அறிவிப்பு மூலம் இலங்கை அரசு இணங்கி வந்துள்ளது. அதற்குக் குறைந்த எதற்கும் இணங்கும் ஏற்பாடுகளுக்கு நாம் போக முடியாது.
அந்த நிலைப்பாட்டை சிதறடிக்கும் விதமான ஒரு விஷப் பரீட்சைக்குப் பொது வேட்பாளர் என்ற அடிப்படையில் தமிழினம் இணங்கவோ, இறங்கவோ கூடாது. வடக்கு - கிழக்கு இணைப்புத் தொடர்பாக இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் ஓர் ஏற்பாடு உண்டு. இணைப்பை நிரந்தரமாக்க முன்னர் கிழக்கில் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி அனுமதி பெற வேண்டுமென்பதே அது.
ஆனால், அது 19 வருடங்களாக நடைமுறைப்படுத்தப்படாமல் இணைப்பு நீடிக்கப்பட்டது கிழக்கில் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் மீளக் குடியமர்த்தப்பட்ட பின்னரே அந்தத் தேர்தலை நடத்த வேண்டும், நடத்த முடியும் என்ற ஏற்பாடும் அதில் உள்ளது.
பொது வாக்கெடுப்பு
'இப்படி அந்த ஏற்பாடு இருக்கின்ற காரணத்தினால் இனி எப்போதும் அத்தகைய சர்வஜன வாக்கெடுப்பை நடத்த முடியாது - வடக்கு, கிழக்கு இணைப்பை வருடாந்தம் நீடிப்பதைத் தவிர' - என்று தமக்குள் ஜே.ஆர்.ஜெயவர்த்தன நொந்து கொண்டார். அந்த நேரத்தில் கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவே இடம்பெயர்ந்த மக்கள் மீளக்கூடியமர்த்தப்பட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.
இப்போது வடக்கு - கிழக்கில் இருந்து நாட்டுக்குள்ளும் வெளிநாடுகளுக்கும் பல இலட்சம் தமிழர்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில் பொது வாக்கெடுப்பு போன்ற ஒன்றை - விஷப் பரீட்சையை நாமே கோரி அதில் இறங்குவது என்பது நம்மை நாமே அழிப்பதற்கு ஒப்பானதாகும்.
ஆகவே, அத்தகைய திட்டத்துக்குத் தமிழரசுக் கட்சி இடம் கொடுக்கக் கூடாது. இந்த ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பது தொடர்பில் அவசரப்படத் தேவையில்லை.
முதலில் பிரதான தென்னிலங்கைக் கட்சிகளின் வேட்பாளர்களின் தெளிவான நிலைப்பாடு அவர்களின் தேர்தல் விஞ்ஞாபன அடிப்படையில் வெளியான பின்னர், அவற்றைப் பரிசீலித்து சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் கலந்துரையாடிய பின்னர் நாம் ஒரு தீர்க்கமான தீர்மானத்தை எடுக்கலாம்.
அதற்கு முன்னர் அவசரப்பட தேவையில்லை. இதை என்னுடைய செய்தியாகத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் கூறுங்கள். இந்த விடயத்தை ஏற்கனவே மாவை சேனாதிராஜாவுக்கும் சிறீதரனுக்கும் நான் விளக்கியுள்ளேன். மாவையுடன் திரும்பவும் பேசுவேன்." - என்று சம்பந்தன் குறிப்பிட்டிருக்கின்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |