சூடுபிடிக்கு தமிழ் அரசியல் களம்..! தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுங்கள்: விடுக்கப்பட்ட கோரிக்கை
தமிழர்களின் வாக்குகளை கொள்ளையிட்டு நாடாளுமன்றம் சென்ற அனைவரும் பதவி விலகல் செய்ய வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.
இரா.சம்பந்தன் பதவி விலக வேண்டுமென சுமந்திரன் தெரிவித்துள்ள விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கூட்டணிக்கு செய்த துரோகம்
தந்தையின் செல்வா, அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் ஆகியோரால் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியை சிதைத்து 2004 ஆம் ஆண்டு கூட்டணியில் வளர்க்கப்பட்ட சம்பந்தன் வளர்த்த கடாவாக மட்டுமல்ல ஓநாயாகவும் மாறி வரலாற்றுத்துரோகம் செய்தார்.
தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு செய்த துரோகம் தற்போது சம்பந்தனுக்கு திரும்பிவிட்டது. இரா.சம்பந்தன் பதவி விலக வேண்டுமென சுமந்திரன் கேட்டுள்ளதாக ஊடகங்களிலும் சமூகவலைத்தளங்களிலும் செய்திகள் வந்துள்ளன.
இந்நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சட்டத்தரணி வி.தவராசா சம்பந்தனுக்கு எழுதிய கடிதத்தில் “வளர்த்த கடா மார்பில் பாய்ந்து விட்டதாக” சுமந்திரன் மீது குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே, தமிழர்களின் ஜனநாயக மரபினை கட்டிக்காப்பதற்கும் தமிழ் மக்களின் உண்மையான அபிலாசைகளை மீண்டும் நம்பிக்கையோடு கட்டியெழுப்ப, 2004ஆம் ஆண்டு துரோகத்தனத்தால் தமிழர்களின் வாக்குகளை கொள்ளையடித்து நாடாளுமன்றம் சென்ற அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாக தமது பதவி விலகல் செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.