இரத்த ஆறான புனித பூமிகள்! காலம் கடந்து வெளிப்படுத்தப்பட்ட உண்மைகள் - சுட்டிக்காட்டும் ஐக்கிய மக்கள் சக்தி
குண்டு வைத்து கொல்வதற்கும் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை, இவை இரண்டும் பயங்கரவாதச் செயல்களே ஆகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (14.10.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இரத்த ஆறாக மாற்றப்பட்ட புனித பூமிகள்
அவர் மேலும் தெரிவிக்கையில், கதிர்காமம் மற்றும் ஸ்ரீ தலதா மாளிகை மீதான தாக்குதல்களின் போது பாதுகாப்பாளர்களின் துப்பாக்கிகள் பறிக்கப்பட்டு, அந்தப் புனித பூமிகள் இரத்த ஆறாக மாற்றப்பட்டன.
தலதா மாளிகை வளாகத்தில் இடம்பெற்ற வன்முறைகள் குறித்த உண்மைகளை வெளிப்படுத்திய மகாநாயக்க தேரருக்கும் தியவதன நிலமேவுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
37 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அக்காலத்தில் உண்மையான பயங்கரவாதிகளாகச் செயற்பட்டவர்கள் யார் என்பது தற்போது நாட்டு மக்களுக்குத் தெளிவாகத் தெரியவந்துள்ளது.

நாட்டின் அமைதி முற்றாகச் சீர்குலைக்கப்பட்டது
1980களின் பிற்பகுதியில் அரசியல் கொலைகள் மற்றும் வன்முறைகள் மக்கள் விடுதலை முன்னணியால் முன்னெடுக்கப்பட்டு, அரசியல் தலைவர்களும் அப்பாவிப் பொதுமக்களும் கொல்லப்பட்டனர்.
வீடுகளும், பொதுச் சொத்துக்களும் தீக்கிரையாக்கப்பட்டன. நாடாளுமன்றத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டு, அவ்வாறே தாக்குதலும் நடத்தப்பட்டது.
1971 மற்றும் 1987 – 89 காலப்பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட வன்முறைகள் தீவிரவாதச் செயற்பாடுகளே. இதன்மூலம் நாட்டின் அமைதி முற்றாகச் சீர்குலைக்கப்பட்டது என்றார்.