படகிலிருந்து தவறி வாவிக்குள் விழுந்த 22 வயது இளைஞர் உயிரிழப்பு
மட்டக்களப்பு - கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமீன்மடு பகுதியில் வாவியில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (29.11.2026) இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு முகத்துவாரம் ஊடாகக் கடலுக்குக் கடற்றொழிலுக்குச் சென்றுவிட்டு, மீண்டும் மட்டக்களப்பு வாவிக்குள் வந்த படகிலிருந்து தவறி வீழ்ந்தே குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 22 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கயிறு அறுந்து விழுந்ததில் நடந்த விபத்து
கடலில் இருந்து வாவிக்குள் படகு வந்தபோது, படகில் பொருத்தப்பட்டிருந்த இயந்திரத்தின் கயிறு அறுந்து வீழ்ந்துள்ளது. இதனால் தடுமாறிய இளைஞர் வாவிக்குள் வீழ்ந்துள்ளார்.

சுமார் இரண்டு மணி நேரமாக குறித்த இளைஞரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், கடற்றொழிலாளர்களால் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மண்முனை வடக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி அகமட் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

