பிரான்ஸில் மகிந்தவை கேலி செய்த நாடகம்! இலங்கையில் வெடித்தது புதிய சர்ச்சை
பிரான்ஸில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வொன்றில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையும் அவரது முதுமையையும் கேலி செய்யும் வகையில் அரங்கேற்றப்பட்ட நாடகக் காட்சி, இலங்கையில் சமூக ஊடகங்களில் பல்வேறு சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நாடகக் காட்சிக்கு எதிராகப் பல தமிழ் சமூக ஊடகப் பயனர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளதுடன், அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் முதியவர் ஒருவரையும் அவரது உடல்நிலையையும் கேலி செய்வது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு
மேலும், போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வில் இவ்வாறான காட்சிகள் இடம்பெறுவது நினைவேந்தலின் கௌரவத்தைப் பாதிப்பதாகவும், நாட்டில் மீண்டும் இனவாத மோதல்களைத் தூண்டக்கூடாது என்றும் பலர் வலியுறுத்தியுள்ளனர்.
அதேவேளை, மகிந்த ராஜபக்சவின் அரசியல் மற்றும் குடும்ப அரசியலை விமர்சிப்பவர்கள் கூட குறித்த நாடகக் காட்சியைக் கண்டித்துள்ளமை சமூக ஊடக விவாதங்களில் கவனம் பெற்றுள்ளது.
மறுபுறம், இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரும் அரசாங்கமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிலர் கோரிக்கை விடுத்துள்ளதுடன், தற்போதைய அரசாங்கத்தின் மீதும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
நாமல் ராஜபக்சவுக்கு அரசியல்
இதற்கிடையில், இந்தச் சம்பவம் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட அரசியல் நகர்வாக இருக்கலாம் என்றும், இதன் மூலம் நாமல் ராஜபக்சவுக்கு அரசியல் அனுகூலம் ஏற்படுத்த முயற்சி இடம்பெறுகிறதா என்றும் சில சமூக ஊடகப் பயனர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும்,மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலம், பொருளாதார நெருக்கடி மற்றும் ராஜபக்ச குடும்பத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்தும் பலர் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.

எவ்வாறாயினும், அரசியல் மற்றும் இன ரீதியான முரண்பாடுகளைத் தூண்டும் நடவடிக்கைகள் இறுதியில் அப்பாவி மக்களையும் நாட்டின் அமைதியையும் பாதிக்கும் எனச் சுட்டிக்காட்டியுள்ள பலர், இத்தகைய சூழலில் அமைதியும் இன நல்லிணக்கமும் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர்.