மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு..!
பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டை விடுவித்தமையே, மக்கள் தலைவராகத் தனது மறைந்த தந்தையான டி.ஏ. ராஜபக்சவுக்கு வழங்கிய மிகப் பெறுமதியான பரிசு என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனது தந்தையின் 59ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இழப்பின் வலி
தந்தையை இழந்து 59 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அந்த இழப்பின் வலி இன்றும் மாறவில்லை எனத் தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச, தனது குடும்பத்தைப் பாதுகாத்த தாயார் மற்றும் மூத்த சகோதரர் சமல் ராஜபக்ச ஆகியோரையும் நன்றியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.
மேலும், தனது தந்தை கிராமப்புற மக்களின் நலனுக்காகவும், விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், கிராமப்புற மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காகவும் ஆற்றிய சேவைகளையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, காணியற்ற விவசாயிகளுக்கு அரச காணிகளை வழங்குவதற்கும், விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் தனது தந்தை நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெற்றோர்களையும் வயதானவர்களையும் அன்புடன் பராமரிக்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ள மகிந்த ராஜபக்ச மறைந்த பின்னர் எஞ்சியிருப்பது நினைவுகளும் வெற்றிடங்களுமே எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ருஹுணு மக்களின் அன்பைப் பெற்ற டி.ஏ. ராஜபக்சவின் மகனாக இருப்பது பெருமையளிப்பதாகவும், மக்கள் ஆதரவு என்பது ராஜபக்ச குடும்பத்தின் பாரம்பரியம் எனவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.