வடக்கு - கிழக்கில் எங்கும் காணிகள் கையகப்படுத்தப்படவில்லை! அமைச்சர் அருண ஜயசேகர விளக்கம்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எங்கும் காணிகளைக் கைப்பற்றவில்லை என்றும், மாறாகத் தேசிய பாதுகாப்புக் கருதி அவற்றைப் பயன்படுத்தி வருவதாகவும் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து நேற்றைய தினம் (28.11.2026) கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வருடம் மாத்திரம் மன்னார் மாவட்டத்தில் 1400 ஏக்கர் அரச காணிகளும், 19 ஏக்கர் தனியார் காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
காணிகளை விடுவிப்பதற்கான விசேட வேலைத்திட்டம்
மேலும், எதிர்காலத்தில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டு, அங்குள்ள ஏனைய காணிகளை விடுவிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்து வருவதாகவும் பிரதி அமைச்சர் சபையில் விளக்கமளித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு - செலவுத் திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டுக் குழுநிலை விவாதத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆற்றிய உரைக்குப் பதிலளித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.