அரசாங்க ஊழியர்கள் நாட்டுக்குச் சுமையா? கோட்டாபய அரசின் வெட்கமற்ற முயற்சி: பசிலுக்கு பதிலடி
அரச சேவையானது நாடு தாங்க முடியாத அளவிற்கு பரந்து விரிந்துள்ளதாகவும், அது நாட்டுக்கு சுமை எனவும் இலங்கையின் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ள விடயம், அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருக்கும் என கருதுவதாகவும், அந்த கருத்தை இழிவாக கருதி , அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் எதிா்க்கட்சி தலைவா் சஜித் பிரேமதாச தொிவித்துள்ளாா்.
இது தொடா்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவா், இந்த நாட்டில் அரச சேவையை சீர்குலைப்பதற்கு அரசாங்கம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தயாராகி வருகின்றது என்பது இதன் மூலம் தெளிவாகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளாா்.
அரச பணியாளா்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 60லிருந்து 65 ஆக உயர்த்துவதான ஒரு திட்டத்தை அமைச்சர் வரவு செலவு திட்ட உரையில் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து அரச பணியாளா்கள், நாட்டுக்கு சுமையாக இருப்பதாக ஒரு கருத்தையும் முன்வைத்தார்.
தேர்தல் காலத்தில் அவர்களை முடிசூடும் தரத்திற்கு உயர்த்தி வைத்தவர்களை, அவர்களின் தேவைகள் நிறைவேறிய பின்னர், அவமதித்து நடத்துவது அரசாங்கத்தின் நன்றி கெட்ட செயற்பாடு என்பதால் அவை குறித்து ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்றும் சஜித் பிரேமதாச தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாா்.
கொரோனா உள்ளிட்ட பேரிடர்களை சந்தித்த காலத்தில் அரச சேவை பாராட்டத்தக்கது மற்றும் விலை மதிப்பற்ற செயற்பாடுகள் என்று கூறி அவர்களை பாராட்டிய அரசாங்கம், பேரழிவு முடிவதற்குள் அனைத்தையும் மறந்து, அவர்களை நாட்டுக்கு சுமையாகக் கருதுவது சந்தர்ப்பவாத செயற்பாட்டை எடுத்துக்காட்டுகின்றது.
நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
எனினும், அரசியல் அதிகாரத்தை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் தன்னிச்சையான நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக எந்த வித திட்டமிடலும் இல்லாமல் அரச சேவையில் ஆட்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மேற்கொண்ட செயற்பாட்டின் விளைவுகளை இன்று நாடு அனுபவிக்க வேண்டியுள்ளது.
அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லையை 65 ஆக உயர்த்துவதாக வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டமையானது இந்த சிக்கல்களை மேலும் அதிகரிக்கும்.
இவையனைத்தும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் தன்னிச்சையான, சந்தர்ப்பவாத நடவடிக்கைகளே அன்றி திட்டமிட்ட நடவடிக்கைகள் அல்ல.
எனவே தன்னால் ஏற்பட்ட பிழைகளுக்காக இந்த நாட்டில் உள்ள அரச பணியாளா்கள் மீது குற்றங்களை சுமத்துவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் வெட்கமற்ற முயற்சிக்கு தாம் எதிா்ப்பை வெளியிடுவதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளாா்.