ஹவுதிப் படைகளின் தாக்குதல் தீவிரம் - கடைசி நேரத்தில் ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவு
யேமனின் சிவப்புக்கடல் கடலோரப் பகுதிகளைத் தம்வசம் வைத்துள்ள ஈரான் ஆதரவு ஹவுதிப் போராளிகள், நாட்டின் தென்பகுதி மலைநாட்டுக் கைக்கோடுகளைக் கைப்பற்றும் நோக்கில் தீவிரத் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றனர்.
சவுதி அரேபியா மற்றும் சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட யேமன் அரசுப் படைகளுக்கிடையே இடம்பெற்று வரும் இந்த போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.
இதேவேளை, சவுதி அரேபியாவின் தொடர் கோரிக்கைகளை அடுத்து, ஹவுதி போராளிகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் கடைசி நிமிடத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அந்த தாக்குதல் உத்தரவை இரத்து செய்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் எடுத்த திடீர் முடிவு
அமெரிக்க போர் விமானங்களில் குண்டுகள் பொருத்தப்பட்ட நிலையிலேயே இவ்வாறு உத்தரவு திரும்பப் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, சவுதி தலைநகர் ரியாத் மீது தாம் தாக்குதல் நடத்தியதாக ஹவுதிகள் உரிமை கோரியுள்ளனர். தலைநகரின் விமான நிலையப் பகுதியில் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதுடன் புகையும் வெளியாகியுள்ளது.

எனினும், இது குறித்து சவுதி தரப்பு இதுவரை உத்தியோகபூர்வமாக எந்தக் கருத்துக்களையும் வெளியிடவில்லை.
தற்போது இடம்பெற்று வரும் மோதல்களில் இதுவரை சுமார் 700 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,20,000க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஹவுதிகளின் இந்த அதிரடி முன்னேற்றம் உலகளாவிய எண்ணெய் விநியோகத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.