பிரித்தானிய விமான நிலையங்களில் தொழில்நுட்பக் கோளாறு: விமானச் சேவைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
பிரித்தானியாவின் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த நாட்டின் பல பிரதான விமான நிலையங்களில் விமானச் சேவைகள் தாமதமடைந்துள்ளள.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பாரிய தொழில்நுட்பக் கோளாறினால் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் இவ்வாறானதொரு அசௌகரியம் ஏற்பட்டுள்ளது.
விமானங்கள் இரத்து
ஸ்கொட்லாந்திலுள்ள பிரெஸ்ட்விக் கட்டுப்பாட்டு மையத்தில் ஏற்பட்ட இணைப்புச் சிக்கல் காரணமாகவே இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மான்செஸ்டர், கிளாஸ்கோ, பெல்ஃபாஸ்ட் மற்றும் லண்டன் கெட்விக் உள்ளிட்ட பல விமான நிலையங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டதுடன், சில விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
தற்போது தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு இயல்பு நிலை திரும்பியுள்ளதாக பிரித்தானிய போக்குவரத்து அமைச்சர் ஹெய்டி அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.
எனினும், தொடர்ச்சியாக ஏற்படும் இவ்வாறான கோளாறுகள் குறித்து விமான நிறுவனங்கள் கடும் கவலையும் எதிர்ப்பும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.