கடும் நிபந்தனைகளுடன் சஜின் வாஸுக்குப் பிணை - வெளிநாடு செல்லத் தடை
சுமார் 243.8 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை சட்டவிரோதமான முறையில் ஈட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன கொழும்பு நீதிவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு தலைமை நீதிவான் அசங்க எஸ். போதராகம முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடுமையான நிபந்தனைகளுடன்
இதன்போது, சந்தேகநபருக்கு தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளை வழங்கிய நீதிவான், அவர் வெளிநாடு செல்வதற்கும் தடை விதித்து உத்தரவிட்டார்.

கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கச் சென்றிருந்த போதே சஜின் வாஸ் குணவர்தன கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
2015 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வருமானத்திற்குப் புறம்பாகச் சேர்த்த சொத்துக்கள் குறித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் பின்வரும் தகவல்களைச் சமர்ப்பித்திருந்தது.
* சஜின் வாஸ் குணவர்தன மற்றும் அவரது குடும்பத்தினர் உரிய செலவு விபரங்களைச் சமர்ப்பிக்காமல் 27 முறை வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.
* அவரது மனைவியின் பெயரில் உள்ள தனிப்பட்ட வங்கித் கணக்குகளில் சுமார் 34 மில்லியன் ரூபாய் பணம் காணப்படுகின்றது.
* 40 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியைக் கொண்ட புதிய வணிக முயற்சி ஒன்றும் விசாரணைகளின் போது கண்டறியப்பட்டுள்ளது.

விசாரணைகளைத் தொடர்வதற்காகச் சந்தேகநபரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு கோரிக்கை விடுத்திருந்தது.
எனினும், சஜின் வாஸ் குணவர்தன சார்பில் முன்னிலையான சட்டத்தரணியின் பிணைக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிவான், கடுமையான நிபந்தனைகளுடன் அவரை விடுவிக்க உத்தரவிட்டார்.